இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்க தயார் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகளிலும் தோற்றதற்கு காரணம் சொதப்பலான பேட்டிங் தான் காரணம். குறிப்பாக டாப் ஆர்டர்கள் சரியாக ஆடவில்லை. 

முதல் போட்டியில் ஷிகர் தவானும் முரளி விஜயும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதன் முதல் இன்னிங்ஸில் ஓரளவிற்கு ஆடிய இருவரும் பெரிதாக ரன் ஏதும் குவிக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பினர். மூன்றாம் வரிசையில் களமிறங்கிய ராகுலும் சொதப்பினார். இதையடுத்து இரண்டாவது போட்டியில் ஷிகர் தவான் நீக்கப்பட்டு, முரளி விஜயும் ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறக்கப்பட்டனர். 

இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட்டானார் முரளி விஜய். தவறான ஷாட்களை ஆடமுயன்று ராகுலும் சொதப்பினார். முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அதிரடி மாற்றங்களுடன் மூன்றாவது போட்டியில் களமிறங்க உள்ளது. லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த படுதோல்வி, இந்திய வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. 

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நிரந்தர தொடக்க ஜோடி அமையாத நிலையில், டெஸ்ட் போட்டியில் ஓபனிங் ஆட வாய்ப்பு கொடுத்தால் ஆட தயாராக இருப்பதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரராக இருக்கும் ரோஹித் சர்மாவிற்கு டெஸ்ட் அணியில் பெரும்பாலும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அப்படியே டெஸ்ட் அணியில் ஆடினாலும் மிடில் ஆர்டரில் தான் களமிறக்கப்பட்டார்.

இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக தன்னை களமிறக்கினால், ஆட தயார் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக ஆடியபோது, தொடக்க வீரராக களமிறக்கப்படுவேன் என நினைக்கவில்லை. ஆனால் தற்போது தொடக்க வீரராக ஆடிவருகிறேன். எனவே டெஸ்ட் அணியிலும் எனக்கான வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன். என்னை தொடக்க வீரராக களமிறக்கினால் ஆட தயாராக இருக்கிறேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை. எனினும் இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.