இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, தொடக்கத்திலேயே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்துவிட்டது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. இதையடுத்து நடந்த முதல் 2 ஒருநாள் போட்டிகளில், முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. 

தொடர் சமநிலை அடைந்துள்ள நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய விரும்பியதால் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இன்றைய போட்டியில் ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே ரோஹித்தும் தவானும் பெரிய ஷாட்களை ஆட முடியாமல் திணறினர். வில்லி மற்றும் மார்க் உட் சிறப்பாக பந்துவீசிவருகின்றனர். 

மார்க் உட் வீசிய முதல் ஓவரில் ரோஹித் சர்மா ஒரு ரன் கூட எடுக்கவில்லை. வில்லி வீசிய இரண்டாவது ஓவரில் வெறும் 3 ரன்கள். மார்க் உட் வீசிய 3வது ஓவரில் தவான் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். வில்லி வீசிய நான்காவது ஓவரை எதிர்கொண்ட ரோஹித் சர்மா, அந்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன்  எடுத்தார். எஞ்சிய 5 பந்துகளில் தவான் ரன் ஏதும் எடுக்கவில்லை. முதல் ஓவரை போலவே மார்க் உட் வீசிய 6வது ஓவரிலும் ரோஹித் சர்மா, ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அந்த ஓவரும் மெய்டன் ஆனது. 

தவானாவது கிடைத்த பந்துகளை அடித்து ஆடினார். ஆனால் தொடக்கம் முதலே பந்துகளை எதிர்கொள்ளவே திணறினார் ரோஹித். 17 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்த ரோஹித் சர்மா, 18வது பந்தில் வில்லியின் பந்தில் மார்க் உட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

இதையடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்து கேப்டன் கோலி ஆடிவருகிறார். 9 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 25 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.