இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்த ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார  வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வீரர்களை ரன்கள் குவிக்க விடாமல் குல்தீப் யாதவ் தனது சுழலின் மூலம் திணறடித்தார். ராய், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 268 ரன்கள் சேர்த்தது. ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் மட்டுமே அரைசதம் அடித்தனர். 

269 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, தொடக்கத்தில் நிதானமாகவும் பிறகு அதிரடியாகவும் ஆடி ரன்களை குவித்தார். சதமடித்த ரோஹித் சர்மா 137 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். 

இதன் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிகமான ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். இவர் நேற்று அடித்த 137 ரன்கள் தான் இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன். இவருக்கு அடுத்தபடியாக விராட் 107 ரன்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.