'குல்தீப்பிடம் விசா இல்லை'; தனுஷ் கோட்யான் தேர்வுக்கு புது விளக்கம் அளித்த ரோகித் சர்மா!

கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தனுஷ் கோட்யான் சேர்க்கப்பட்டதற்கு ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். 

Rohit Sharma has explained the inclusion of Tanush Kotian in the Indian team ray

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்குகிறது.  கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பதிலாக இளம் வீரர் தனுஷ் கோட்யான் சேர்க்கப்பட்டுள்ளார். 

அஸ்வினின் இடத்தில் யுஸ்வேந்திர சஹல் அல்லது அக்சர் படேல் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷ் கோட்யான் சேர்க்கப்பட்டது அனைவருக்கும் அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது. இந்நிலையில், 4வது டெஸ்ட் போட்டி தொடர்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அனுபவ‌மில்லாத தனுஷ் கோட்யானை அணியில் எடுத்தது ஏன்? என்பது குறித்து ரோகித் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த அவர், ''அக்சர் படேல் இப்போது விளையாடும் சூழ்நிலையில் இல்லை. குல்தீப் யாதவிடம் விசா இல்லை. யாரேனும் ஒருவர் விரைவில் இங்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். தனுஷ் கோட்யான் நவம்பரில் இங்கு வந்தார். ஆகையால் அவரை தேர்வு செய்துள்ளோம்'' என்றார்.

தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா, ''நான் ஒரு வேடிக்கைக்காக இதை கூறினேன். தனுஷ் கோட்யான் மிகச்சிறந்த வீரர். கடந்த 2 ஆண்டுகளாக முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியிலும் அவரது திறமையை காட்டினார். மேலும் மெல்போர்ன் மற்றும் சிட்னி டெஸ்ட்களில் இரண்டு ஸ்பின்னர்கள் விளையாட வேண்டிய தேவை ஏற்பட்டால் நமக்கு இன்னொரு ஸ்பின்னர் வேண்டும். ஆகையால் ஏற்கெனவே தயாராக இருந்த தனுஷ் கோட்யானை அணியில் சேர்த்துள்ளோம்'' என்றார்.

குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட குல்தீப் யாதவ் அதில் இருந்து மீண்டு இப்போது தான் பயிற்சியை தொடங்கியுள்ளார். அவர் 100% உடல் தகுதியை எட்டாததாலும் அக்சர் படேலுக்கு குழந்தை பிறந்துள்ளதாலும் இவர்கள் இருவரும் அணியில் இடம்பெறவில்லை. இதனால் தான் தனுஷ் கோட்யான் அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

26 வயதான தனுஷ் கோட்யான் ஸ்பின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில்லும் அசத்தக்கூடியவர். முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியுள்ள இவர் 33 போட்டிகளில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 41.21 என்ற சராசரியுடன் ரன்கள் குவித்துள்ளார். கடந்த நவம்பரில் நடந்த ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் 1 விக்கெட் வீழ்த்தியதுடன் 44 ரன்களும் எடுத்திருந்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios