இங்கிலாந்து மண்ணில் இந்திய தொடக்க ஜோடி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. 

இந்திய அணியின் வெற்றிகரமான தொடக்க ஜோடிகளில் ஒன்றாக ரோஹித் சர்மா  - ஷிகர் தவான் ஜோடி திகழ்கிறது. சச்சின் - கங்குலி, சச்சின் - சேவாக் ஆகிய இரண்டு தொடக்க இணைகளும் இந்திய அணியின் வெற்றிகரமான நீண்டகால தொடக்க ஜோடி. 

அதன்பிறகு இந்திய அணியின் சிறந்த தொடக்க ஜோடியாக ரோஹித் - தவான் ஜோடி வலம்வருகிறது. சச்சின் - கங்குலி, சேவாக் - காம்பீர் ஆகிய இணைகள் வலது கை - இடது கை பேட்ஸ்மேன்கள் அடங்கிய தொடக்க இணைகளாக அமைந்தன. இவற்றில் சச்சின் - கங்குலி மிகவும் வெற்றிகரமான இணை. ஆனால் சேவாக் - காம்பீர் ஜோடி இந்திய அணிக்கு நீண்டகால தொடக்கத்தை அமைத்துக் கொடுத்ததில்லை. 

அதன்பிறகு இந்திய அணிக்கு கிடைத்ததுதான் ரோஹித் - தவான் தொடக்க ஜோடி. கடந்த 2013ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத்தான் இந்த ஜோடி முதன்முதலில் களம் கண்டது. அதன்பிறகு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இருவரும் சிறப்பான, அதிரடியான, வெற்றிகரமான தொடக்க ஜோடியாக உள்ளனர். 

இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து வருகின்றனர். கடின இலக்கை விரட்டும்போது தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடி, மிடில் ஆர்டரின் வேலையை எளிதாக்கி விடுவர். இவ்வாறு வெற்றிகரமான தொடக்க இணையாக உலாவரும் ரோஹித் - தவான் ஜோடி, இங்கிலாந்தில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு ரோஹித் - தவான் ஜோடி 49 ரன்களை குவித்தது. அதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை குவித்த தொடக்க ஜோடி என்ற சாதனையை ரோஹித் - தவான் நிகழ்த்தியுள்ளனர்.

ரோஹித் - தவான் தொடக்க ஜோடி, இங்கிலாந்து மண்ணில் 893 ரன்களை குவித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் 879 ரன்களுடன் ராய் - அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி உள்ளது. 858 ரன்களுடன் அலெஸ்டர் குக் - இயன் பெல் ஜோடி உள்ளது. 

முதல் 5 இடங்களில் முதல் இடத்தை தவிர மற்ற நான்கு இடங்களிலும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் தான் உள்ளனர். அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ஒரே அந்நிய அணி, இந்திய அணி மட்டும்தான். அதுவும் முதலிடம். இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து தொடக்க இணைகளை பின்னுக்குத்தள்ளி ரோஹித் - தவான் ஜோடி இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது பெரிய விஷயம் தான்.