அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 12 ரன்களில் சர்வதேச டி20 சாதனை ஒன்றை தவான் - ரோஹித் தொடக்க ஜோடி தவறவிட்டது.  

அயர்லாந்துக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் ஆடிவரும் இந்திய அணி, இந்த தொடரை முடித்துக்கொண்டு, இங்கிலாந்து செல்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. 

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தவான் - ரோஹித் தொடக்க ஜோடி சாதனை ஒன்றை தவறவிட்டது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ரோஹித் - தவான் தொடக்க ஜோடி, அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்களை குவித்தது. தவான் 74 ரன்களில் வெளியேறினார். 2 கேட்ச் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும், சதமடிக்காமல் 97 ரன்களில் அவுட்டானார் ரோஹித். 

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்களை சேர்த்தது. இன்னும் 12 ரன்கள் அடித்திருந்தால் சர்வதேச டி20 போட்டியில் முதல் விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன்களை அடித்த இணை என்ற சாதனையை படைத்திருக்கலாம். 

நியூசிலாந்தின் கப்டில் - வில்லியம்சன் இணை, முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோராக உள்ளது. டி20 கிரிக்கெட்டின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோரும் இதுதான். 160 ரன்களை குவித்த தவான் - ரோஹித் இணை, இன்னும் 12 ரன்கள் எடுத்திருந்தால் இந்த சாதனையை முறியடித்து இருந்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட்டது. 

ஆனால் மற்றொரு சாதனையை இந்த ஜோடி படைத்துள்ளது. இரண்டாவது முறையாக சர்வதேச டி20 போட்டியில் 150 ரன்களை கடந்த ஜோடி என்ற சாதனையை தவானும் ரோஹித்தும் படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட்டுக்கு இவர்கள் 158 ரன்களை சேர்த்தனர். 

சர்வதேச டி20 போட்டிகளில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர்களில் 165 ரன்களுடன் இந்தியாவின் ரோஹித் - ராகுல் ஜோடி 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.