கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக திகழ்ந்த வீரர்களுக்கு இடையே, அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடியும்வரை கடும் போட்டி நிலவியுள்ளது.

சச்சின் - ஷேன் வார்னே, சச்சின் - சமிந்தா வாஸ், பிரையன் லாரா - மெக்ராத் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. சச்சினை ஷேன் வார்னேவும் சமிந்தா வாஸும் அதிகமான முறை ஆட்டமிழக்க செய்துள்ளனர். அதேபோல கிரிக்கெட்டின் மற்றொரு ஜாம்பவனான லாராவிற்கு மெக்ராத் எதிரி. 

அந்த வரிசையில் அடுத்து குறிப்பிடத்தகுந்த போட்டியாளர்கள் என்றால் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் தான். அவர்கள் ஆடிய காலக்கட்டத்தில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 

பாண்டிங்கின் நம்பிக்கையை சிதைத்த ஹர்பஜன் சிங்:

இருவரும் நேருக்கு நேர் 48 போட்டிகளில் மோதியுள்ளனர். ரிக்கி பாண்டிங்கை 12 முறை வீழ்த்தியுள்ளார் ஹர்பஜன் சிங். அதிலும் 2001ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. 

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக்கிடம், ஹர்பஜன் சிங்கை பற்றி கவலைகொள்ள தேவையில்லை; பார்த்துக்கொள்ளலாம் என நம்பிக்கை வார்த்தை கூறினார் பாண்டிங். ஆனால் பாண்டிங்கின் நம்பிக்கையை சிதைத்து, பாண்டிங்கின் கிரிக்கெட் வாழ்வில் மோசமான தொடராக மாற்றினார் ஹர்பஜன் சிங்.

மூன்று டெஸ்ட் போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் பாண்டிங் பேட்டிங் ஆடினார். இந்த 5 இன்னிங்ஸ்களிலுமே ஹர்பஜன் சிங்கிடம் விக்கெட்டை இழந்தார் பாண்டிங். அவற்றில் மூன்று முறை டக் அவுட். 5 இன்னிங்ஸ்களில் சேர்த்தே வெறும் 17 ரன்கள் மட்டுமே பாண்டிங் எடுத்திருந்தார். இதுபோன்றதொரு மோசமான தொடரை அவரது கிரிக்கெட் வாழ்வில் சந்தித்திருக்கவே மாட்டார். அந்தளவிற்கு மோசமான தொடராக பாண்டிங்கிற்கு அது அமைந்தது. 

பாண்டிங்கின் பதிலடி:

2001ம் ஆண்டில் ஹர்பஜனிடம் சவுக்கடி வாங்கிய பாண்டிங், 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் ஹர்பஜனுடன் சேர்த்து இந்திய அணியையும் தண்டித்துவிட்டார். 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த பாண்டிங், 140 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. அந்த இரண்டு விக்கெட்டையும் ஹர்பஜன் சிங் தான் வீழ்த்தினார். ஹர்பஜன் 7 ஓவர் வீசி 35 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றி இருந்த நிலையில், 39வது ஓவரை வீசினார். 

அந்த ஓவரில் ஹர்பஜன் சிங்கின் பவுலிங்கை அடித்து நொறுக்கிய பாண்டிங், 14 ரன்களை குவித்தார். அதன்பிறகு ஹர்பஜன் சிங்கிற்கு 2 ஓவர் மீதமிருந்தும் கூட, அவர் பந்துபோடவில்லை. ஹர்பஜன் சிங்கின் 39வது ஓவரில் தொடங்கிய அதிரடியை இன்னிங்ஸ் முடியும் வரை நிறுத்தவில்லை பாண்டிங். அந்த ஓவருக்கு முன்பு வரை 72 பந்துகளுக்கு 49 ரன்கள் எடுத்திருந்த பாண்டிங், ஹர்பஜன் ஓவரில் அடிக்க தொடங்கிய பிறகு, அவர் எதிர்கொண்ட கடைசி 49 பந்துகளில் 91 ரன்களை குவித்து மிரட்டினார். 

இதேபோல ஒவ்வொரு முறையும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும்போது எதிரும் புதிருமாக பாண்டிங்கும் ஹர்பஜன் சிங்கும் திகழ்ந்தனர். ஆனால் அனைத்து மோதல்களும் போட்டியின்போது மட்டும்தான். போட்டி முடிந்ததும் மீண்டும் சாதாரண நிலைக்கு திரும்பி கைகுலுக்கி கொள்வோம் என பாண்டிங் கூறியிருக்கிறார். 

அதன்பிறகு இருவரும் ஐபிஎல்லில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒன்றாக ஆடியதோடு, பாண்டிங் பயிற்சியாளராகவும் ஹர்பஜன் சிங் வீரராகவும் இருந்துள்ளனர்.