தோனி தனக்கு விக்கெட் கீப்பிங் குறித்த பல ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் முடிந்த நிலையில், டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணி, கடந்த 18ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார். அணியில் சீனியர் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்குடன் ரிஷப் பண்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்தில் நடந்த இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் அங்கீகாரமில்லாத டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடினார். ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். வித்தியாசமான ஷாட்களை ஆடும் ரிஷப் பண்ட், எந்த வரிசையில் களமிறக்கினாலும் சூழலுக்கு ஏற்றவாறு ஆடினார்.

ஐபிஎல் மட்டுமல்லாமல், இங்கிலாந்து மண்ணிலும் சிறப்பாக ஆடியதால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ரிஷப் பண்ட் அனைத்து விதமான போட்டிகளுக்கு ஏற்றவாறும் சூழலை உணர்ந்து ஆடக்கூடியவர் என்றும் அவரது முதிர்ச்சியான பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என்றும் இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றது தொடர்பாக பேட்டியளித்த ரிஷப் பண்ட், தோனி குறித்தும் பேசினார். 

தோனி குறித்து பேசிய ரிஷப், தோனி எனக்கு அண்ணன் மாதிரி. ஐபிஎல் தொடரின்போது அவரிடம் இருந்து நிறைய ஆலோசனைகளை பெற்றுள்ளேன். எனக்கு தேவைப்படும் போதெல்லாம் அவரிடம் ஆலோசனைகள் கேட்பேன். அவரும் நிறைய பயனுள்ள ஆலோசனைகளை கூறியுள்ளார்.

விக்கெட் கீப்பருக்கு கண்கள் மற்றும் கைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் உடல் பேலன்ஸ் ஆகியவை மிக முக்கியம் என கூறியிருக்கிறார். அவர் கூறிய அறிவுரைகளின்படி எனது திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

தோனி பொதுவாகவே இளம் வீரர்களுக்கு, குறிப்பாக விக்கெட் கீப்பர்களுக்கு நிறைய ஆலோசனைகளை வழங்குவார். ஐபிஎல் தொடரின் போது இளம் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷான் ஆகியோருக்கு அறிவுரைகள் வழங்கிய புகைப்படமும் செய்தியும் வைரலானது குறிப்பிடத்தக்கது.