இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை ஆட வைக்கலாம் என முன்னாள் வீரர் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் சரியாக இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சரியாக ஆடாததால், வெற்றியின் விளிம்பில் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் சொதப்பிய பேட்ஸ்மேன்கள், இரண்டாவது போட்டியில் நன்றாக ஆடுவார்கள் என்று பார்த்தால், மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. 

இரண்டாவது போட்டியில் ஷிகர் தவான் நீக்கப்பட்டு புஜாரா சேர்க்கப்பட்டார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மழை காரணமாக ஒருநாள் தாமதமாக தொடங்கப்பட்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 107 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

மீண்டும் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. இந்நிலையில், இந்தியா இங்கிலாந்து தொடரை உன்னிப்பாக கவனித்துவரும் முன்னாள் வீரர் கவாஸ்கர், அவ்வப்போது சில ஆலோசனைகளை வழங்கிவருகிறார். மிகவும் சீனியரான கவாஸ்கர், தற்போது ஒரு கருத்து தெரிவித்துள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்கலாம் எனவும் அவர் மூன்றாவது போட்டிக்கான அணியில் சேர்க்கப்படுவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டை கீப்பராக சேர்க்காவிட்டாலும், பின்வரிசை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்கலாம் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ரிஷப் பண்ட் ரஞ்சி டிராபி, ஐபில், 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி, இந்திய ஏ அணி என அனைத்திலும் நன்றாக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் நடந்த தொடரில் இந்திய ஏ அணிக்காக ஆடிய ரிஷப் பண்ட், சிறப்பாக ஆடினார்.

எனவே மூன்றாவது போட்டியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.