குறித்த நேரத்திற்கு வர தவறியதால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை அணியின் பேருந்தில் ஏற்றாமல் விட்டு சென்றதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, அந்த அணியுடன் டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. 

அடுத்த ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெற உள்ளதால், அதன் முன்னோட்டமாக இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. வலுவான இங்கிலாந்து அணியை வீழ்த்தும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.  எனவே இந்த தொடர் இந்திய அணிக்கும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் முக்கியமான ஒன்று. 

இந்நிலையில், பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரவி சாஸ்திரி, நேரம் தவறாமைக்கு தான் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து பேசினார். நேரம் தவறாமைக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும் அதுதொடர்பான ஒரு நிகழ்வை எடுத்துக்கூறினார். 

2007ல் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார். இதுதொடர்பாக பேசிய ரவி சாஸ்திரி, நேரம் தவறினால் அதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். நேரம் தவறாமை மிக முக்கியம். அதுவும் ஒரு அணியாக இருக்கும்போது நேரம் தவறவே கூடாது. 

2007 வங்கதேசத்திற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் சென்றபோது நான் தான் அணியின் மேலாளர். அப்போது சிட்டகாங்கில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஹோட்டலிலிருந்து வீரர்கள் செல்லும் பேருந்து காலை 9 மணிக்கு கிளம்பும் என்று முன்கூட்டியே அறிவித்தாயிற்று. 9 மணியானதும் பேருந்தை எடுக்குமாறு கூறினேன். ஆனால் கங்குலி வரவில்லை என்றார்கள். மணி 9 ஆயிற்று; அதனால் நீங்கள் பேருந்தை எடுங்கள், நாம் செல்வோம். கங்குலி காரில் வரட்டும் என்று கூறிவிட்டேன். 

அதன்பிறகு எப்போதுமே பேருந்து கிளம்புவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே கங்குலி வந்துவிடுவார் என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.