இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு தருணங்கள் மறக்க முடியாதவை. 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி உலக கோப்பையை வென்ற தருணங்கள் நெகிழ்ச்சியானவை. 

1983ல் கபில் தேவ் தலைமையிலும், அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து 2011ல் தோனி தலைமையிலும் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. 

இந்த இரண்டு உலக கோப்பைகளில் எது ஸ்பெஷல் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரவி சாஸ்திரி, 1983 இறுதி போட்டியின்போது இந்திய அணியின் மீது பெரிய அளவில் அழுத்தம் இல்லை. அதற்கு முந்தைய இரண்டு உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி இறுதி போட்டியில் மோதியதால், இந்திய அணி மீது பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. அதனால் களத்திற்கு சென்று நன்கு ஆட வேண்டும் என்று மட்டும்தான் இருந்தது.

ஆனால் 2011ல் அப்படியில்லை. மீடியா அதீதமான வளர்ச்சியடைந்திருந்த காலம். போட்டி இந்தியாவில் நடந்தது. அதனால் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் ஒவ்வொரு இந்தியரும் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர். 

எதிர்பார்ப்பு, மீடியா கவரேஜ் என அனைத்து அழுத்தமும் தோனி தலைமையிலான இந்திய அணி மீது இருந்தது. அவ்வளவையும் சமாளித்து இந்திய அணி கோப்பையை வென்றது. அதனால் 1983 உலக கோப்பையை விட 2011 உலக கோப்பை தான் பெரிது என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.