இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்து வெளியேறும்போது நடுவரிடம் இருந்து தோனி பந்தை வாங்கியது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தது. தோனி ஓய்வு பெறப்போகிறாரா? பந்தை ஏன் வாங்கினார்? ஆகிய கேள்விகளுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கமளித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்து வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியேறும்போது, நடுவரிடம் இருந்து தோனி பந்தை வாங்கினார். 

தோனியின் இந்த செயல், தோனி ஓய்வு பெறப்போகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியது. தோனி ஓய்வு பெறப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுதொடர்பான செய்திகளும் வைரலாகின. 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி முடிந்து வெளியேறும்போது தோனி, ஸ்டம்பை எடுத்து கொண்டு சென்றார். அதன்பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்தார். 

அதேபோல், சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதன் முன்னோட்டமாக, தோனி பந்தை வாங்கிய செயலை ரசிகர்கள் அனுமானித்தனர். அதனால் அந்த தகவல் வைரலாக பரவியது. தோனியின் இந்த செயலால் அவரது ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் தோனி மந்தமாக விளையாடியது தொடர்பாக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டிற்கு உள்ளாகவே இருப்பதால், உலக கோப்பை வரை தோனி ஆடுவது அவசியம் என்பதே முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் கிரிக்கெட் ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் தோனியின் அனுபவ அறிவும் ஆலோசனையும் இந்திய அணிக்கு தேவை.

எனவே உலக கோப்பை வரை தோனி ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடுவரிடம் இருந்து பந்தை வாங்கியதால் தோனியின் ஓய்வு குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் நடந்துவருகிறது. 

இந்நிலையில், தோனி பந்தை வாங்கியது மற்றும் அவரது ஓய்வு தொடர்பாக பரவும் தகவல்கள் ஆகியவை குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தோனி நடுவரிடம் இருந்து பந்தை வாங்கியதால் அவர் ஓய்வு பெறப்போவதாக தகவல் பரப்புவது முட்டாள்தனமானது. தோனி அவ்வாறு செய்யமாட்டார். அவரிடம் ஓய்வு பெறும் எண்ணமும் இல்லை என்பதை திட்டவட்டமாக கூறி தோனி ஓய்வு குறித்து பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

பிறகு பந்தை வாங்கியது ஏன்? என்பதற்கு விளக்கமளித்த ரவி சாஸ்திரி, ஆடுகளத்தின் தன்மையை பந்தின் தேய்வை வைத்து தெரிந்துகொள்ளலாம். நாங்கள் 45 ஓவர் வரை இங்கிலாந்து அணிக்கு வீசிவிட்டோம். எனவே பந்து எந்தளவிற்கு தேய்ந்திருக்கிறது என்பதை வைத்து ஆடுகளத்தின் தன்மையை அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக பந்துவீச்சு பயிற்சியாளரிடம் பந்தை கொடுப்பதற்காகவே தோனி வாங்கினார் என ரவி சாஸ்திரி விளக்கமளித்துள்ளார். 

இதன்மூலம் தோனியின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.