இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்காக 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகாலம் ஆடியவர் ரமேஷ் பவார். கங்குலி தலைமையிலான இந்திய அணியில் ஆல்ரவுண்டராக வலம்வந்தவர் ரமேஷ் பவார். ஆஃப் ஸ்பின் மற்றும் பேட்டிங்கில் சிறந்து விளங்கிய ரமேஷ் பவார், இந்திய அணியில் நீண்டகாலம் ஆடவில்லை. 

இந்திய அணிக்காக 31 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடி 162 ரன்களையும் 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் ரமேஷ். 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். 2007ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் ஆடவில்லை. மாநில அணிக்காக ஆடிய ரமேஷ், பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 

இந்நிலையில், தற்போது இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த துஷார் கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து மகளிர் அணியின் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரமேஷ் பவாரை பிசிசிஐ பயிற்சியாளராக அறிவித்துள்ளது. 

வரும் நவம்பர் மாதம் மகளிர் அணிக்கான டி20 உலக கோப்பை நடக்க உள்ளது. அதுவரை ரமேஷ் பவார் அணியின் பயிற்சியாளராக செயல்படுவார்.