இங்கிலாந்தில் இந்திய அணி பயணிக்கும் பேருந்தின் ஓட்டுநர் ஜெஃப் குட்வின், தனது மனைவியின் உயிரை காப்பாற்றியது சுரேஷ் ரெய்னா தான் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிந்துவிட்டன. டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. 

இந்திய அணி இங்கிலாந்து செல்லும்போதெல்லாம், வீரர்களை ஏற்றிச்செல்லும் பேருந்தை ஓட்டுநராக பணிபுரிபவர் ஜெஃப் குட்வின். அவர் பிசிசிஐ-க்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். 

அப்போது சுரேஷ் ரெய்னா செய்த உதவி குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக பேசிய ஓட்டுநர் குட்வின், என் மனைவிக்கு புற்றுநோய் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி இங்கிலாந்து வந்தபோது இதுகுறித்து ரெய்னாவிடம் தெரிவித்தேன். அவரது ஆடைகளை ஏலத்தில்விட்டு அதில் கிடைத்த பணம் முழுவதையும் என் மனைவியின் சிகிச்சைக்காக கொடுத்துவிட்டார். தற்போது என் மனைவி உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார். என் மனைவி உயிரோடு இருப்பதற்கு ரெய்னா செய்த உதவிதான் காரணம். அதை நான் மறக்கமாட்டேன் என அந்த ஓட்டுநர், ரெய்னா செய்த உதவியை நினைவுகூர்ந்து நெகிழ்ந்துள்ளார்.