அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி ஆடியது. முதல் போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

 

இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. தவானுக்கு பதிலாக ராகுல், தோனிக்கு பதில் தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவிற்கு பதிலாக உமேஷ் யாதவ் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். 

டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பவுலிங் செய்ய விரும்பியதால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கோலி மற்றும் ராகுல் களமிறங்கினர். இந்த போட்டியில் 17 ரன்கள் எடுத்தால், சர்வதேச டி20 போட்டியில் அதிவேக 2000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெறலாம் என்ற நிலையில் களமிறங்கிய கோலி, 9 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். 

இதையடுத்து ராகுலுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய ராகுல், அரைசதம் கடந்து 70 ரன்களில் அவுட்டானார். ராகுலின் விக்கெட்டுக்கு பிறகும் அதிரடியை தொடர்ந்த ரெய்னா, 69 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

கடந்த முறை பேட்டிங் ஆட சரியான வாய்ப்பு கிடைக்காத மனீஷ் பாண்டேவிற்கு இந்த முறை வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அவர் அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. பெரிய ஷாட்களை ஆட முடியாமல் திணறினார். ஆனால் ஹர்திக் பாண்டியாவோ கடைசி இரண்டு ஓவர்களில் அயர்லாந்து அணியை அலறவிட்டார். 19வது ஓவரின் 4 மற்றும் 5வது பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர்கள் விளாசினார். அதேபோல் கடைசி ஓவரிலும் இரண்டு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் விளாசினார். 

இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது. 

214 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார் உமேஷ் யாதவ். இரண்டாவது பந்திலேயே ஸ்டிர்லிங் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது தொடங்கிய இந்திய பவுலர்களின் விக்கெட் வேட்டை நிற்கவேயில்லை. கடந்த முறை அரைசதம் அடித்த ஷேனான் இந்த முறை 2 ரன்னில் வெளியேறினார். 

அந்த அணியில் ஒரு வீரர் கூட சோபிக்கவில்லை. அனைவரும் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்க, 12.3 ஒவரில் வெறும் 70 ரன்னுக்கே ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.