இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும் என டெஸ்ட் போட்டிகளின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் கணித்து கூறியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற டிராவிட் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. 

அதன்பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி, 2011 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் தொடர் ஆடியது. அந்த இரண்டு தொடர்களிலுமே இந்திய அணி தோல்வியை தழுவியது. 2011ம் ஆண்டு 0-4 எனவும் 2014ம் ஆண்டு 1-3 எனவும் டெஸ்ட் தொடரை இழந்தது. தோனி தலைமையிலான இந்திய அணி 2011 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறையும் டெஸ்ட் தொடரை இழந்தது. 

அந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்த தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேநேரத்தில் ஜோ ரூட், அலெஸ்டர் குக், பட்லர், பேர்ஸ்டோ, ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் என இங்கிலாந்து அணியும் வலுவாக உள்ளது. எனவே இந்த தொடர் கடும் போட்டி நிறைந்ததாகவும் சவால் நிறைந்ததாகவும் இருக்கும் என்பது உறுதி. 

இந்நிலையில், இந்தியா இங்கிலாந்து தொடர் குறித்தும், 2007ல் தனது தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து தொடரை வென்றது குறித்தும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரரும் இந்திய பெருஞ்சுவருமான ராகுல் டிராவிட் பேசியுள்ளார். தற்போது 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட், இந்த தொடர் குறித்து பேசியபோது பல தகவல்களை தெரிவித்தார். 

அப்போது, இங்கிலாந்து சூழலை புரிந்துகொண்டு எவ்வளவு சீக்கிரம் அதற்கேற்றவாறு மாறுகிறோம் என்பது மிக முக்கியம். 2007ல் ஆடும்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடினோம். 5 போட்டிகள் கொண்ட தொடர் என்றால், முதல் போட்டியில் தோற்றால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது. ஏனென்றால் நீண்ட தொடரில் மீண்டெழலாம். ஆனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை வெற்றிகரமாக தொடங்க வேண்டியது அவசியம். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தமட்டில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவது முக்கியம். 2007ல் நாங்கள் ஆடியபோது, நல்லவிதமாக நமது பவுலர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. 3 போட்டிகளிலும் உடற்தகுதியுடன் ஆடினர்.  

இந்திய அணி பேட்டிங்கில் நன்றாக ஆடி ரன்களை குவிக்கும். ஆனால், வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடையாமல் பார்த்துக்கொள்வது அவசியம் என டிராவிட் தெரிவித்தார். 

மேலும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2-1 என வெல்ல வாய்ப்புள்ளதாக கணித்து கூறியுள்ளார் டிராவிட்.