சூழலை புரிந்துகொண்டு ஆடும் திறன்கொண்ட ரிஷப் பண்ட், டெஸ்ட் போட்டிகளில் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவுவார் என இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணி, கடந்த 18ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார். அணியில் சீனியர் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்குடன் ரிஷப் பண்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்தில் நடந்த இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் அங்கீகாரமில்லாத டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடினார். ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். வித்தியாசமான ஷாட்களை ஆடும் ரிஷப் பண்ட், எந்த வரிசையில் களமிறக்கினாலும் சூழலுக்கு ஏற்றவாறு ஆடினார்.

இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக ஆடிய ரிஷப் பண்டிற்கு இந்திய டெஸ்ட் அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரிஷப் பண்டின் பேட்டிங் திறமையை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியிலிருந்து இந்திய ஏ அணி வரை பல தருணங்களில் மெருகேற்றியவர் அந்த அணிகளின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். 

ரிஷப் பண்டிற்கு இந்திய டெஸ்ட் அணியில் ஆட வாய்ப்பு கிடைத்திருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த ராகுல் டிராவிட், ரிஷப் மிகவும் திறமையான வீரர். இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆடினார். அவர் வித்தியாசமாக பேட்டிங் செய்ய விரும்புகிறார். அதில் சிறப்பாகவும் செயல்படுகிறார். அவர் எப்படி ஆடுகிறார் என்பது நமக்கு தெரியும். 2017-2018 ரஞ்சி டிராபியில் 900 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 100ஐ தாண்டியுள்ளது. ஐபிஎல்லிலும் சிறப்பாக ஆடினார். 

இங்கிலாந்து தொடரில், அவருக்கு பல சவால்களை கொடுத்தோம். பல வரிசைகளில் மாறி மாறி பேட்டிங் செய்ய வைத்தோம். சூழலுக்கு ஏற்றவாறு சிறப்பாக ஆடினார் ரிஷப். முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதி போட்டியில் இக்கட்டான நிலையில், அவர் அடித்த 64 ரன்கள் முக்கியமானது. 

அவர் அதிரடியாக ஆடுகிறார். ஆனால் அப்படி மட்டுமே ஆடக்கூடியவர் அல்ல. சூழலை புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆடக்கூடியவர். அவர் டெஸ்ட் அணியில் இடம்பெற்றது சிறப்பானது. கண்டிப்பாக அவரது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.