தற்போதைய பவுலர்களில் யாருடைய பவுலிங்கில் ஆட விரும்புகிறார் என்பதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

ராகுல் டிராவிட் 1996ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். 2012ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். இந்திய அணியின் பெருஞ்சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட், அவர் ஆடிய காலக்கட்டத்தில் பல இக்கட்டான தருணங்களில் தனது திறமையான பேட்டிங்கால் இந்திய அணியை மீட்டெடுத்துள்ளார். 

2007 உலக கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் இந்தியாவின் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு தொடர்ந்து பங்காற்றிவருகிறார். 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி மற்றும் இந்திய ஏ அணி ஆகியவற்றின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் டிராவிட், இந்திய அணிக்கு இளம் வீரர்களை உருவாக்கி கொடுக்கும் தலையாய பணியை செய்துவருகிறார்.

இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராகுல் டிராவிட்டிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றிற்கெல்லாம் டிராவிட் பதிலளித்தார்.

அப்போது, தற்போதைய பவுலர்களில் யார் பவுலிங்கில் ஆட விரும்புகிறார்? யாருடைய பவுலிங் சவாலாக இருக்கும்? என கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் டிராவிட் பதிலளித்தார். 

தென்னாப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான காசிகோ ரபாடாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள விரும்புவதாக டிராவிட் தெரிவித்தார். மேலும் புதிய பந்தில் புவனேஷ்வர் குமாரின் பவுலிங்கை எதிர்கொள்வது சவலானதாக இருக்கும் எனவும் டிராவிட் தெரிவித்துள்ளார்.