இங்கிலாந்தில் நடந்துவரும் கவுண்டி கிரிக்கெட்டில் இந்திய வீரர் புஜாரா ஆடிவருகிறார். 

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. அடுத்த ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெற உள்ளதால், இந்த தொடரில் இந்தியா சிறப்பாக ஆட வேண்டிய அவசியம் உள்ளது. 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படும் நோக்கில், அங்கு நடந்துவரும் கவுண்டி கிரிக்கெட்டில் புஜாரா ஆடிவருகிறார். யார்க்‌ஷைர் அணிக்காக ஆடிவரும் புஜாரா, இந்த தொடரில் சோபிக்கவில்லை. 10 இன்னிங்ஸ்களில் ஆடி வெறும் 132 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இங்கிலாந்தில் ஆடுவதற்கு புஜாரா திணறிவருகிறார். 

அதனால் அவருக்கு இங்கிலாந்து தொடர் மிகவும் எளிதானதாக அமைந்துவிடாது என்றே கருதலாம். 

இந்நிலையில், சர்ரே அணி மற்றும் யார்க்‌ஷைர் அணிக்கு எதிரான போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த யார்க்‌ஷைர் அணியின் மூன்றாவது வீரராக புஜாரா களமிறங்கினார். முதல் விக்கெட் சீக்கிரமே விழுந்ததால், களத்தில் நிதானமாக ஆடிய புஜாரா, ரன் எடுக்க திணறினார்.

42வது பந்தில்தான் ரன் கணக்கையே தொடங்கினார். அவர் களமிறங்கி 73 நிமிடங்களுக்கு பிறகு ரியான் படேல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி ரன் கணக்கை தொடங்கினார் புஜாரா. 111 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா 23 ரன்களில் அவுட்டானார். முதல் ரன்னையே 42வது பந்தில் எடுத்த புஜாராவால் இந்த அளவிற்கு வேறு எந்தவிதமான தண்டனையையும் சர்ரே அணிக்கு வழங்கியிருக்க முடியாது. புஜாரா கடுமையாக சோதித்த இந்த சர்ரே அணிக்காகத்தான் கோலி ஆட இருந்தார். பின்னர் ஐபிஎல்லில் ஏற்பட்ட கழுத்து காயம் காரணமாக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடவில்லை.

இதைவிட மோசமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார் புஜாரா. தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. அதில் மூன்றாவது போட்டியில் முதல் இரண்டு விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்துவிட, அதன்பிறகு களமிறங்கிய புஜாரா, விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதற்காக நிதானமாக ஆடினார். அவர் களமிறங்கி 79 நிமிடங்களுக்கு பிறகு 54வது பந்தில் முதல் ரன்னை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.