இங்கிலாந்தில் நடந்துவரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய ஏ அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ஏ ஆகிய அணிகளுக்கு இடையே முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 

ஒவ்வொரு அணியும் பரஸ்பரம் எதிரணிகளுடன் இரண்டு போட்டிகளில் மோதின. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, மற்றொரு போட்டியில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இந்தியாவிடமும் ஏற்கனவே ஒரு போட்டியில் தோல்வியை தழுவியிருந்தது. 

எனவே இறுதி போட்டிக்கு இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில், இந்தியா ஏ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்கினர். ரிஷப் பண்ட் 5 ரன்னில் வெளியேறினார். அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 

இதையடுத்து தொடக்க வீரர் பிரித்வி ஷாவுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடிய இருவருமே சதமடித்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 160 ரன்களை குவித்தது. சதமடித்த பிரித்வி ஷா, 102 ரன்களில் அவுட்டானார். 

தீபக் ஹூடா 21 ரன்களிலும் விஜய் சங்கர் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இஷான் கிஷான் 21 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 147 ரன்களை குவித்த விஹாரி, ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட்டானார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்களை குவித்தது. 

355 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸின் தொடக்க வீரர் பிளாக்வுட்டின் விக்கெட்டை முதல் பந்திலேயே வீழ்த்தினார் தீபக் சாஹர். மற்றொரு தொடக்க வீரரான ஹேம்ராஜ் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். மெக்கர்த்தி 17, அம்ப்ரிஷ் 32, தாமஸ் 1, ரேமன் 26, கார்ன்வால் 18 என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்துவந்த வெஸ்ட் இண்டீஸ், 37.4 ஓவரில் 151 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இந்திய ஏ அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜூலை 2ம் தேதி நடக்க உள்ள இறுதி போட்டியில் இந்தியா ஏ அணியும் இங்கிலாந்து லயன்ஸ் அணியும் மோத உள்ளன.