சமகால கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இந்திய அணி கேப்டன் விராட் கோலி திகழ்கிறார். மிகவும் திறமையான வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருவதால், ரன் மெஷின் என அழைக்கப்படுகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை விராட் கோலி முறியடிக்க வாய்ப்புள்ளது. உலகின் தலைசிறந்த வீரராக கோலி வலம்வருகிறார். 

டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்றுவிதமான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக திகழ்கிறார். இந்நிலையில், கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முஷ்தாக் முகமது, இந்திய அணியில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு தலைசிறந்த வீரர் இருந்திருக்கிறார். கவாஸ்கர், டெண்டுல்கர் என அந்த வரிசையில் தற்போது கோலி இருக்கிறார். 

கோலி அனைத்து விதமான கிரிக்கெட்டுகளிலும் சிறந்த வீரராக உள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்றுவிடும். கோலியை கட்டுப்படுத்துவது என்பது எந்த ஒரு அணி கேப்டனுக்கும் கடினமான விஷயம் தான். பாகிஸ்தான் அணிக்கும் கோலி சிம்மசொப்பனமாக திகழ்வார். அவரை கட்டுப்படுத்துவது பாகிஸ்தான் கேப்டனுக்கும் பெரும் தலைவலியாக இருக்கும். ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு கோலி சவாலாக திகழ்வார் என முஷ்தாக் முகமது தெரிவித்துள்ளார்.

முஷ்தாக் முகமது பாகிஸ்தான் அணிக்காக 1959ம் ஆண்டிலிருந்து 1978ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஆடியுள்ளார்.