பாகிஸ்தானை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், இரு கைகளிலும் மிரட்டலாக பந்துவீசுகிறார்.

சர்வதேச அளவில் வேகப்பந்துவீச்சில் எப்போதுமே சிறந்த வீரர்களை கொண்டிருக்கும் அணி பாகிஸ்தான். வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், ஷோயப் அக்தர், ஷமி, ரியாஸ் என அந்தந்த காலகட்டத்தில் அதிவேகங்கள் பாகிஸ்தான் அணிக்கு கிடைத்து கொண்டே இருந்தனர்.

அண்மையில் 10 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் மிகத்துல்லியமாகவும் வேகமாகவும் பந்துவீசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அந்த சிறுவனின் திறமையை கண்டு வியந்த வாசிம் அக்ரம், அந்த சிறுவனுக்கு பயிற்சியளித்து வருகிறார். 

இந்நிலையில், முஜஃபராபாத்தை சேர்ந்த ஹமாத் பெய்க் என்ற 13 வயது சிறுவன் இரண்டு கைகளிலும் பந்துவீசி அசத்துகிறார். இந்த சிறுவன் பந்துவீசுவதை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளருமான இன்சமாம் உல் ஹக்கின் பார்வையிட்டுள்ளார். அந்த சிறுவனின் திறமையை கண்டு இன்சமாம் வியந்துள்ளார்.

தற்போது அந்த சிறுவனுக்கு 13 வயதுதான் ஆகிறது என்பதால், அவரை எதிர்காலத்தில் பாகிஸ்தான் அணிக்கு ஆடுவதற்காக தயார் செய்துவருகின்றனர். அந்த சிறுவன் இரு கைகளிலும் பந்துவீசுவதை கண்ட இன்சமாம், வலது கையில் நன்றாக வீசுவதை கண்டு வலது கையிலேயே வீசுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டில் நடந்துவரும் டிஎன்பிஎல் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணிக்காக ஆடிய தமிழக வீரர் மோஹித் ஹரிஹரன் இரண்டு கைகளிலும் பந்துவீசி அசத்தியது குறிப்பிடத்தக்கது.