இங்கிலாந்திடம் 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி என அனைத்திலும் தோல்வியடைந்து மரண அடி வாங்கிய ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேவில் நடந்த முத்தரப்பு தொடரை வெல்லும் முனைப்பில் இருந்தது. ஆனால் அதிலும் தோல்வியடைந்துள்ளது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனியர் வீரர்களான அவர்கள் இல்லாமல் அந்த அணி திணறிவருகிறது. இங்கிலாந்திடம் 5 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்து ஒயிட் வாஷ் ஆனது ஆஸ்திரேலியா. ஒரு டி20 போட்டி ஆடி, அதிலும் தோற்றது. 

இங்கிலாந்திடம் பட்ட காயத்திற்கு ஜிம்பாப்வேவில் நடந்த முத்தரப்பு தொடரை வென்று மருந்து போட்டுக்கொள்ளலாம் என ஆஸ்திரேலியாவிற்கு மீண்டும் காயமே மிஞ்சியுள்ளது. 

ஜிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாப்வேவில் நடந்தது. இந்த தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் மற்றும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் என அனைத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 

இதையடுத்து இறுதி போட்டியில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ஷார்ட் மற்றும் ஃபின்ச் அதிரடியாக ஆடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஃபின்ச் 47 ரன்களும் ஷார்ட் 76 ரன்களுக்கு குவித்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், ஸ்டாய்னிஸ் என எந்த வீரரும் சோபிக்காததால், 200 ரன்களை கடக்க வேண்டிய ஆஸ்திரேலிய அணி 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

எனினும் 183 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். 184 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபர்ஹான் மற்றும் அடுத்து களமிறங்கிய டலட் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தனர். முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்த நெருக்கடியிலும் மற்றொரு தொடக்க வீரரான ஃபகார் ஜமான் அதிரடியாக ஆடி 91 ரன்களை குவித்தார். அவர் சிறப்பாக ஆடி கொடுத்ததால், நடுவரிசையில் களமிறங்கிய வீரர்களுக்கு பணி சற்று எளிதானது. பிறகு பொறுப்பை கையில் எடுத்து ஆடிய ஷோயப் மாலிக் பாகிஸ்தான் அணியை வெற்றியடைய செய்தார். 

19.2 ஓவரில் இலக்கை எட்டி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் முத்தரப்பு தொடரை பாகிஸ்தான் வென்றது. 

இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு ஆறுதலாக இந்த தொடரை வெல்ல நினைத்த ஆஸ்திரேலியாவின் நினைப்பு, நினைப்பாகவே போய்விட்டது.