ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி சாதனைகளை குவித்துள்ளது. 

ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்டது. 

இந்நிலையில், 4வது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய இமாம் உல் ஹக் மற்றும் ஃபகார் ஜமான் ஆகிய இருவரும் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டனர். அதிரடியாக இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 304 ரன்களை குவித்தது. 

சதமடித்த இமாம் உல் ஹக், 113 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜமானுடன் ஆசிஃப் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதே ரன்ரேட் குறைந்துவிடாமல் ஆடியது. அதிரடியாக ஆடிய ஜமான், இரட்டை சதம் விளாசினார். 210 ரன்கள் குவித்து கடைசி வரை ஜமான் ஆட்டமிழக்கவில்லை. 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களை குவித்தது. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் மற்றும் ஆறாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை ஃபகார் ஜமான் பெற்றுள்ளார்.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 

1. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான். சர்வதேச அளவில் ஆறாவது வீரர்.(சச்சின், சேவாக், ரோஹித், கப்டில், கெய்லுக்கு அடுத்து ஃபகார்)

2. ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோரை ஃபகார் - இமாம் உல் ஹக் ஜோடி பதிவு செய்துள்ளது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 304 ரன்களை குவித்தது. கெய்ல் - சாமுவேல்ஸ்(372), சச்சின் - டிராவிட்(331), கங்குலி - டிராவிட்(318), ஃபகார் - இமாம்(304)

3. ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் இதுதான். ஃபகார் - ஜமான்(304), இன்ஸமாம் - சோஹைல்(263)

4. ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான் - 399/1..

5. ஜிம்பாப்வேயில் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரும் இதுதான்.