யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒஸாகா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகாவுடன் மோதினார். 

இதில், செரீனா வில்லியம்ஸின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய ஒஸாமா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தினார். இதன் மூலம்,  ஒஸாகா யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.  இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையை ஒஸாமா பெற்றார்.

இந்த போட்டியில் செரீனா வில்லியம்ஸுக்கும், நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் செரீனா வில்லியம்ஸ் புள்ளிகளை இழக்க நேரிட்டது. இந்த வாக்குவாதத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு சர்ச்சையுடன் முடிந்தது. 

இரண்டாவது செட்டை செரீனா விளையாடும் போது அவரது பயிற்சியாளர் கைகளால் அடிக்கடி சைகை செய்தார். அதனை விதிமீறல் என நடுவர் கண்டித்தார். ஆனால் செரீனா, தனது பயிற்சியாளர் தன்னை வெற்றி பெறுமாறு உத்வேகப்படுத்தினார்  ஏமாற்றி வெற்றி பெறுவதற்கு பதில் நான் தோற்றுவிட்டே செல்வேன் எனவும் பதிலளித்தார். ஆனால், அதை நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், அவரது டென்ன்ஸ் பேட்டை ஓங்கி தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். இது மீண்டும் விதிமீறலாகி ஆட்டத்தில் செரீனாவின் புள்ளி குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மைதானத்திலேயே கடினமான வார்த்தைகளை பயன்படுத்த அவரை யுஎஸ் ஓபன் டென்னிஸ் அதிகாரிகள் வந்து சாந்தப்படுத்தினர்.

24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா வில்லையம்ஸை வீழ்த்திய ஒஸாகா, வாழ்த்து மழையில் நனைகிறார். செரீனா வில்லியம்ஸ் தான் தனது ரோல் மாடல் என கூறிவந்த ஒஸாகா, தற்போது செரீனாவையே வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.