அஷ்வினை சமாளிக்க இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும் இந்த வெற்றி அபார வெற்றி கிடையாது. இந்திய அணி வெற்றியின் விளிம்பில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் அஷ்வின் மற்றும் இஷாந்த் சர்மா அருமையாக பந்துவீசினர். அதிலும் அஷ்வினின் வலது கை ஆஃப் ஸ்பின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அவரிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதற்கு காரணம், இங்கிலாந்து அணியில் 7 வீரர்கள், இடது கை பேட்ஸ்மேன்கள். அவர்களுக்கு வலது கை ஆஃப் ஸ்பின்னரான அஷ்வினின் பந்து சவாலாக இருந்தது. அதனால் தான் இங்கிலாந்து வீரர்களுக்கு அஷ்வினால் நெருக்கடி கொடுக்க முடிந்தது. 

இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அஷ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த 7 விக்கெட்டுகளில் ஜோஸ் பட்லர் மற்றும் ஜோ ரூட் ஆகிய இருவரைத் தவிர மற்ற 5 பேர் இடது கை பேட்ஸ்மேன்கள். அஷ்வினின் சுழலை சமாளிப்பதற்காக இரண்டாவது போட்டியில் டேவிட் மாலனுக்கு பதிலாக ஆலி போப் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.