யார் வேண்டுமானால் கேப்டனாக செயல்படலாம்; ஆனால் தோனி தான் உண்மையான தலைவர் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில் முக்கியமானவர் கங்குலி. கபில் தேவ், கங்குலி, தோனி ஆகியோர் இந்திய அணியை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வளர்த்தெடுத்துள்ளனர். தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி, மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்றது. இக்கட்டான நிலையிலும் டென்ஷனாகாமல் கூலாக அணுகும் அணுகுமுறையால் கேப்டன் கூல் என தோனி அழைக்கப்பட்டார்.

தோனியின் கேப்டன்சியும், தோனியின் கேப்டன்சியின் கீழ் இந்திய அணி படைத்த சாதனைகளும் அடைந்த வளர்ச்சியும் கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும்.

இந்நிலையில், ஆங்கில இதழ் ஒன்றுக்கு நெஹ்ரா எழுதியுள்ள கட்டுரையில், தோனியின் கேப்டன்சியை புகழ்ந்து எழுதியுள்ளார். அதில், தோனியை 2005ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது சந்தித்தேன். அதன்பிற்கு காயம் காரணமாக நான் அணியில் இல்லை. பின்னர் 2009ல் தான் தோனியுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு நிறைய போட்டிகளில் தோனியுடன் ஆடினேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் அவரது கேப்டன்சியின் கீழ் ஆடியுள்ளேன். 

தோனி மிகத்திறமையான பேட்ஸ்மேன். பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் 2005ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் தோனியை 3ம் வரிசையில் களமிறக்கிவிட்டார் கங்குலி. அப்போது சதமடித்து அசத்திய தோனி, அதே ஆண்டில் இலங்கைக்கு எதிராக 183 ரன்களை குவித்தார்.

கும்ப்ளேவின் ஓய்விற்கு பிறகு தோனி, டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற சமயத்தில், சச்சின், டிராவி, கங்குலி, சேவாக், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகிய சீனியர் வீரர்கள் அணியில் இருந்தனர். அப்படியான சூழலில் கேப்டன்சி பொறுப்பை கையாள்வது எளிதான காரியம் அல்ல. எனினும் அவர்களை எல்லாம் சிறப்பாக கையாண்டு, கேப்டனாக திறம்பட செயல்பட்டார் தோனி.

கேப்டனாக பொறுப்பேற்ற புதிதிலே, 2007ம் ஆண்டில் டி20 உலக கோப்பையை தோனி கைப்பற்றினார். நெருக்கடியான சூழலை எப்படி கையாள வேண்டும் என்பது தோனிக்கு நன்றாக தெரியும். இக்கட்டான நிலைகளில் டென்ஷனாகாமல் கூலாக ஆடி, தனக்கே உரிய பாணியில் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பவர் தோனி. அதுமட்டுமல்லாமல் அணி வீரர்களிடமிருந்து அவர்களது பெஸ்ட் ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதிலும் தோனி வல்லவர் என தோனியை நெஹ்ரா புகழ்ந்துள்ளார்.