விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் அடுத்த சுற்றில் கால் பதித்தார். 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது 2-வது சுற்றில் கஜகஸ்தானின் மிஹைல் குகுஷ்கினை எதிர்கொண்டார். இதில், 6-4, 6-3, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு 2-வது சுற்றுகளில் போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் அர்ஜென்டீனாவின் ஹொராஸியோ ஜெபாலோஸுடன் மோதினார். இதில் 6-1, 6-2, 6-3 என்ற செட்களில் ஹொராஸியோ ஜெபாலோஸை தோற்கடித்தார். 

ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் 6-3, 6-4, 7-5 என்ற செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹசியை வீழ்த்தினார்.
 
அதேபோன்று, மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹேலப் 7-5, 6-0 என்ற செட்களில் சீனாவின் ஜென் சாய்சாயை வெற்றி கண்டார். 

போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 3-6, 6-2, 6-4 என்ற செட்களில் அமெரிக்காவின் கிளாரி லியுவை தோற்கடித்தார்.
 
போட்டித் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் ரஷியாவின் டரியா கசாட்கினா 6-2, 6-3 என்ற செட்களில் கஜகஸ்தானின் யுலியா புடின்ட்செவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி 6-4, 7-5 என்ற செட்களில் கனடாவின் இயூஜின் பௌசார்டை வீழ்த்தினார்.