இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததற்கு கோலி பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவரது கேப்டன்சி குறைகளை திரும்பி பார்க்க வேண்டும் எனவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இருந்த இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலுமே இந்திய அணியில் கேப்டன் விராட் கோலியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்த விராட் கோலி, இரண்டாவது இன்னிங்ஸிலும் வெற்றிக்கு போராடினார். ஆனால் அவர் அவுட்டானதும் போட்டி தலைகீழாக மாறிவிட்டது. 

இறுதியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன், இந்த தோல்விக்கு இந்திய அணியின் கேப்டனாக கோலி பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள நாசர் ஹூசைன், விராட் கோலி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக ஆடினார். முதல் இன்னிங்ஸில் அபாரமாக அடி, இந்திய அணியை போட்டிக்குள் அழைத்து வந்தார். அவர் பேட்டிங் சிறப்பாக ஆடியிருந்தாலும் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். ஒரு கேப்டனாக அவரது செயல்பாடு, முழுமையானதாக இல்லை. 

இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில், 87 ரன்களுக்கே 7 விக்கெட்டை  இங்கிலாந்து அணி இழந்துவிட்டது. அதன்பிற்கு அடில் ரஷீத்தும் சாம் கரணும் களத்தில் இருந்தபோது, அஷ்வினை ஒரு மணி நேரம் பந்துவீசவே அழைக்கவில்லை கோலி. இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக 19 சராசரியை வைத்துள்ளார் அஷ்வின். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக வீசக்கூடியவர் அஷ்வின். அப்படியிருக்கையில், அவரை சாம் கரணுக்கு பந்துவீச அழைக்கவில்லை. அந்த நேரத்தில்தான் போட்டியின் கட்டுப்பாட்டை இந்திய அணி இழந்தது. எனவே இந்திய அணியில் தோல்விக்கு கேப்டன் கோலி பொறுப்பேற்க வேண்டும் என நாசர் ஹூசைன் தெரிவித்தார். 

இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் சாம் கரண் அடித்த 63 ரன்கள்தான் அந்த அணியை கடும் சரிவிலிருந்து மீட்டது. அந்த ரன்கள் இங்கிலாந்தின் வெற்றிக்கு பேருதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.