தோனியின் மந்தமான ஆட்டம், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைனையும் வியப்ப்பில் ஆழ்த்தியுள்ளது. 

கிரிக்கெட்டின் தாய்வீடு என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், 323 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி ஆடியது. முதல் மூன்று விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்த இந்திய அணியை கோலியும் ரெய்னாவும் மீட்டெடுத்தனர். 27 ஓவரில் 140 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது இந்திய அணி. 

இப்படியான இக்கட்டான சூழலில் களமிறங்கிய தோனி, 47வது ஓவர் வரை களத்தில் நின்றார். 20 ஓவர்கள் களத்தில் நின்ற தோனி, அடித்து ஆடவேயில்லை. மந்தமாக ஆடிய தோனி, வெற்றி இலக்கை விரட்ட முற்படவேயில்லை. இங்கிலாந்து பவுலிங்கை அடித்து ஆட தோனி முயற்சிக்கவே இல்லாதது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 59 பந்துகளுக்கு 37 ரன்கள் மட்டுமே எடுத்தார். தோனி இப்போது அடிப்பார், இப்போது அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

தோனியின் மந்தமான ஆட்டத்தால் அதிருப்தியடைந்த ரசிகர்களில் ஒரு பகுதியினர், தோனியை சத்தமிட்டு கிண்டல் செய்து விமர்சித்தனர். இது மைதானத்தில் இருந்த மற்ற ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

தோனியின் ஆட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன், தோனி லெக் ஸ்பின் பவுலிங்கில் திணறுவார். எனவே அடில் ரஷீத்தின் பவுலிங்கை நிதானமாக ஆடினார். ஆனால் கடைசி வரை தோனி அடித்து ஆட முற்படாதது பெரிய வியப்பாக இருந்தது. தோனி சரியாக ஆடாவிட்டாலும் அவரை நாம் விமர்சிக்க முடியாது. அவரை விமர்சிக்க நாம் யார்..? எனினும் வெற்றி இலக்கை நெருங்கக்கூட செய்யாமல் இந்திய அணி எளிமையாக தோற்றிருக்க கூடாது. 

தோனி மீதான விமர்சனங்களுக்கு கேப்டன் கோலி பதிலடி கொடுத்தார். அதுதொடர்பாக பேசிய நாசர் ஹூசைன், தோனி மீதான விமர்சனங்களுக்கு கோலி பதிலடி கொடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. இந்திய அணியை பொறுத்தவரை சீனியர் வீரர்களை விமர்சிக்க மாட்டார்கள் என நாசர் ஹூசைன்  தெரிவித்துள்ளார்.