மயன்க் அகர்வாலின் அதிரடி சதத்தால் இங்கிலாந்து லயன்ஸ் அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய ஏ அணி அபார வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து சென்றுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஏ அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய வீரர்களின் சொதப்பலான பேட்டிங்கால் இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. 

அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் நடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய மயன்க் அகர்வால் சதமடித்து அசத்தினார். 

இதையடுத்து இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான இரண்டாவது போட்டியில் இந்திய ஏ அணி நேற்று மோதியது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய வீரர்கள் களமிறங்கினர். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயன்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தது. அகர்வால் - கில் ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர். 

அதிரடியாக இருவருமே அரைசதம் கடந்தனர். 72 ரன்களில் கில் அவுட்டானார். ஆனால் தொடர்ந்து சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால், இந்த போட்டியிலும் சதமடித்தார். 112 ரன்களில் அகர்வால் ஆட்டமிழந்தார். மூன்றாம் வரிசையில் களமிறங்கிய விஹாரியும் சிறப்பாக ஆடி 69 ரன்களை குவித்தார். ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முறையே 7 மற்றும் 6 ரன்களில் வெளியேறினர். எனினும் கடைசி நேரத்தில் தீபக் ஹூடாவின் அதிரடியால் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்திய ஏ அணி 309 ரன்களை குவித்தது. 

310 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து லயன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக நிக் கபின்ஸும் கோலரும் களமிறங்கினர். இந்தியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் சதமடித்த கபின்ஸை இந்த முறை 22 ரன்களில் வெளியேற்றினார் ஷர்துல் தாகூர். கோலர் 7 ரன்களில் அவுட்டானார். ஹெய்ன் 1, லிவிங்ஸ்டோன் 23 ரன்களில் வெளியேறினர். ஃபோக்ஸ்ஸ் 32, ஸ்டீவன் 23, டாவ்சன் 38, பர்னார்டு 31 என அனைவருமே போராடினர். ஆனால் சிறந்த பார்ட்னர்ஷிப் ஒன்று வலுவாக அமையவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே வந்தது இங்கிலாந்து லயன்ஸ் அணி. 

41.3 ஓவரில் 207 ரன்களுக்கே இங்கிலாந்து லயன்ஸ் அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த முறை அடைந்த தோல்விக்கு, இந்த போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு இந்திய ஏ அணி பதிலடி கொடுத்துள்ளது.