இங்கிலாந்தில் நடந்த கவுண்டி அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து மிரட்டினார் நியூசிலாந்து அணி வீரர் மார்டின் கப்டில்.

வோர்செஸ்டர்ஷையர் மற்றும் நார்த்தாம்டன்ஷையர் ஆகிய கவுண்டி அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நார்த்தாம்டன்ஷையர் அணி, 188 ரன்கள் குவித்தது.

189 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வோர்செஸ்டர்ஷையர் அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில், தொடக்கம் முதலே அதிரடியாக ஆட தொடங்கினார். நார்த்தாம்டன்ஷையர் அணி வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.

20 பந்துகளில் அரைசதமும் 35 பந்துகளில் சதமும் அடித்து மிரட்டினார் கப்டில். 38 பந்துகளை கொண்ட கப்டில், 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் குவித்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான கிளார்க் 33 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். அதனால் அந்த அணி 13.1 ஓவரில் 189 ரன்களை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

எந்தவிதமான போட்டியிலும் மிகக்குறைந்த பந்தில் சதமடித்தவர் என்ற சாதனை கிறிஸ் கெய்ல் வசமே உள்ளது. 2013 ஐபிஎல்லில் புனே அணிக்கு எதிராக 30 பந்துகளில் சதமடித்தார் கெய்ல்.