இந்திய அணியின் கிரிக்கெட் மேட்ச் பார்க்கச் சென்ற இரண்டு பேர், காதல் ஜோடியாக மாறிய சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போதுதான், இந்த சம்பவம் நடந்துள்ளது. 

பொதுவாக, இந்திய அணி கிரிக்கெட் விளையாடும்போது, மைதானத்தில் கூட்டம் களைகட்டும். அதுவும் இங்கிலாந்து போன்ற இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் போட்டி நடைபெற்றால், மைதானம் உற்சாக கடலில் நிரம்பியிருக்கும்.

இதன்படி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூலை 14) நடைபெற்றது.

இதில், வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இதில், இளைஞர்களும், இளம் பெண்களும் அதிகளவில் காணப்பட்டனர்.

கிரிக்கெட் மைதானத்தில் வீரர்கள் ஆடும்போது, ரசிகர்கள் கூட்டத்தில் நடைபெறும் சுவாரசியமான அல்லது வேடிக்கையான சம்பவங்களையும் கேமிராமேன்கள் படம்பிடித்து ஒளிபரப்புவது வழக்கம். 

இதன்படி, இன்றைய போட்டி நடந்துகொண்டிருந்த நிலையில், மைதானத்தில் நடைபெறும் ருசிகர சம்பவங்களை வீடியோ எடுக்கும் நபர் படமாக்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென மைதானத்தின் ஒரு பகுதியில், இளைஞர் ஒருவர், இளம்பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்துவது போல தோன்றியது. உடனே கேமிராமேன் அதனை ஜூம் செய்தார். அவர் கண்ட காட்சி உண்மைதான்..

அங்கே இளைஞர் காதலை தெரிவிக்க, இளம்பெண் சற்றும் யோசிக்காமல் அதனை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, உடனே இரண்டு பேரும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பகிர்ந்தனர். இதனை கேமிராமேன் அப்படியே படம்பிடிக்க, மைதானமே உற்சாக குரல் எழுப்பி, இளம் காதல் ஜோடியை வாழ்த்தியது. சுற்றியிருந்த ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்ட இருவரும் அப்படியே காதலில் ஆழ்ந்தனர். 

இந்த வீடியோ பலர் செல்ஃபோனில் படம்பிடித்து, டுவிட்டர், ஃபேஸ்புக்கில் பகிர்ந்தனர். இதையடுத்து, வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.