கோலியின் ஆட்டம் தனது கண்களை திறந்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சாம் கரண் தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களும் இந்திய அணி 274 ரன்களும் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தபோதிலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய விராட் கோலி, சதமடித்து இந்திய அணியை மீட்டெடுத்தார். 

இந்திய அணியின் முரளி விஜய், ராகுல், தவான் ஆகிய முதல் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியவர் இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சாம் கரண். இவர் முன்னாள் ஜிம்பாப்வே வீரர் கெவின் கரணின் மகன். கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான சாம் கரணுக்கு, இந்தியாவுடன் ஆடிவரும் இந்த போட்டி, இரண்டாவது டெஸ்ட் போட்டிதான். எனினும் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

போட்டி குறித்து பேசிய சாம் கரண், இந்திய அணியின் 5 விக்கெட்டுகளை 100 ரன்களிலேயே எடுத்துவிட்டோம். அதன்பிறகு விராட் கோலி ஆடிய விதம், எங்களை விரக்தியடைய செய்தது. இது என்னுடைய இரண்டாவது போட்டி தான். ஆனால் இந்த போட்டியிலேயே எனது கண்களை திறந்துவிட்டது கோலியின் ஆட்டம். அவருக்கு பந்துவீசியதன் மூலமும் அவர் ஆடிய விதத்தை பார்த்ததன் மூலமும் ஒவ்வொரு பந்தையும் எவ்வளவு கவனமாக வீச வேண்டும் என்பதை கோலியின் ஆட்டம் கற்றுக்கொடுத்தது என சாம் கரண் தெரிவித்தார்.