இங்கிலாந்துடனான இரண்டாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை இந்திய அணி கேப்டன் கோலி கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் குல்தீப் யாதவின் அசத்தலான சுழல் பந்துவீச்சு மற்றும் ராகுலின் அதிரடி சதம் ஆகியவற்றால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதையடுத்து இரண்டாவது டி20 போட்டி கார்டிப்பில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்  செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் சொதப்பியதால், இந்திய அணியால் பெரிய ஸ்கோரை எட்டமுடியவில்லை. ரோஹித், தவான், ராகுல் ஆகியோர் பவர்பிளே ஓவர்களில் அடுத்தடுத்து வெளியேறியதால், தொடர் விக்கெட் வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுப்பதே பெரிய விஷயமாகிவிட்டது. எனினும் கோலி, ரெய்னா, தோனி ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 148 ரன்கள் எடுத்தது. 

149 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின், ஜேசன் ராய், பட்லர், இயன் மோர்கன், ஜோ ரூட் ஆகியோரை பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் இந்திய பவுலர்கள் தடுத்தனர். அவர்களை சொற்ப ரன்களில் வெளியேற்றினர். எனினும் அலெக்ஸ் ஹேல்ஸ் களத்தில் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்து இங்கிலாந்தை வெற்றி பெற செய்தார். இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய கேப்டன் கோலி, முதல் 6 ஓவருக்கு உள்ளாக வெறும் 30 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். பவர்பிளே எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. அப்படியான இக்கட்டான சூழலிலிருந்து மீண்டு வருவது சாதாரண விஷயமல்ல. எனினும் 148 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர்தான் என்றாலும் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர். குல்தீப்பின் சுழலை சமாளிக்க நன்றாக பயிற்சி எடுத்திருக்கிறார்கள். அதனால் குல்தீப் பவுலிங்கை நன்றாக ஆடினர். உமேஷ் யாதவ் நன்றாக பந்துவீசினார். புவனேஷ்வர் குமாரும் சிறப்பாகத்தான் வீசினார். எனினும் அவரால் போட்டியை வெற்றிகரமாக முடியவில்லை. 19வது ஓவரில் அலெக்ஸ் ஹேல்ஸ் அடித்த பவுண்டரிதான் போட்டியை எங்களிடம் இருந்து பறித்துவிட்டது என கோலி தெரிவித்தார். 

இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முக்கியமான அந்த ஓவரில் முதல் நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் உமேஷ். ஆனால் 5வது பந்தில் ஹேல்ஸ் ஒரு பவுண்டரி அடித்தார். எனினும் முக்கியமான அந்த ஓவரை சிறப்பாக வீசிய உமேஷ் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஒவரில் 12 ரன்கள் தேவைப்பட, 4 பந்துகளில் அதை அடித்துவிட்டார் ஹேல்ஸ்.

19வது ஓவரில் அந்த ஒரு பவுண்டரி போகவில்லை என்றால், கடைசி ஓவரில் இங்கிலாந்து அணிக்கு 4 ரன்கள் கூடுதலாக தேவைப்பட்டிருக்கும். அது பேட்ஸ்மேனின் அழுத்தத்தை அதிகரித்திருக்க கூடும். அதனால் தான் கோலி, 19வது ஓவரில் அடிக்கப்பட்ட பவுண்டரியையும் ஒரு காரணியாக குறிப்பிட்டிருக்கிறார்.