அதிக ரன் எடுக்காம இந்தியா வெற்றியே முக்கியம் என விராட் கோலி பேசுவது பொய், என்று இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நட்சத்திர வீரராக வலம் வருகிறார். ஒருநாள், டி20 போட்டிகளில் அபார பேட்டிங் திறமையை வெளிப்படுத்தும் விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார்.

மின்னல் வேகத்தில் ரன் குவிக்கும் இயந்திரமாக கிரிக்கெட் ஆடும் அவர், டெஸ்டில் மட்டும் சற்று மந்தமாக இருப்பது ஏன் என்று பல தரப்பிலும் கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு அவ்வப்போது பதில் கூறும் விராட் கோலி, தனது ரன்னைவிட அணியின் வெற்றியே முக்கியம் எனச் சொல்வது வாடிக்கையாக உள்ளது. மேலும், இங்கிலாந்தில் அவர் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் பெரிதும் சோபிக்கவில்லை.

இந்நிலையில், இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு ஒருநாள் தொடரில் விளையாடி, தோல்வியை தழுவியது. தற்போது டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில், விராட் கோலி ரன் குவிப்பில் ஈடுபடுவாரா என்பது பற்றி இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’விராட் கோலி இங்கிலாந்து மைதானங்களில் ஆட திணறுகிறார். இந்திய மைதானங்களில் திறமையாக பேட்டிங் செய்யும் அவர் வெளிநாட்டு மைதானங்களில் அவ்வளவாக திறமை காட்டுவதில்லை. 

இதுபற்றி கேட்டால் அணியின் வெற்றியே முக்கியம் என்றும், தனிப்பட்ட வீரரின் ரன் குவிப்பு முக்கியம் இல்லை என்றும் பேசுகிறார். ஆனால், அவர் கூறுவது பொய். விராட் கோலிக்கு எப்போதுமே தனிப்பட்ட முறையில் தான் ரன் குவிக்க வேண்டும் என்கிற எண்ணம் உண்டு. ஏனென்றால் ரன் எடுக்காவிட்டால் அவருக்குத்தான் அசிங்கம். ரன் எடுக்காத பேட்ஸ்மேனை யார் விரும்புவார்கள்.

பொய் சொல்வதை நிறுத்திவிட்டு விராட் கோலி இங்கிலாந்து மைதானங்களில் ரன் குவித்து தன் திறமையை நிரூபிக்க வேண்டும், எனக் கூறியுள்ளார். கடந்த 2012, 2014ம் ஆண்டுகளில் இந்திய அணி இங்கிலாந்து சென்றபோது, 5 முறை விராட் கோலியை ஆண்டர்சன் அவுட் ஆக்கியுள்ளார். விராட் கோலிக்கு சவாலான பந்துவீச்சாளராக ஆண்டர்சன் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.