அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளில் தவறவிட்ட சாதனையை இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அடைந்துவிட்டார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.

சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் விராட் கோலி, சாதனைகளையும் சதங்களையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கூட கோலி முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டிக்கு போட்டி ரன்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி, வெறும் 17 ரன் எடுத்தால் சர்வதேச டி20 போட்டிகளில் விரைவில் 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை பெற்றுவிடலாம் என்ற நிலையில், அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஆடினார். ஆனால் அதில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலாவது அடித்துவிடுவார் என்றால், அதுவும் நடக்கவில்லை. அந்த போட்டியிலும் 9 ரன்னில் வெளியேறினார். 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் எஞ்சிய 8 ரன்களை எட்டி, சர்வதேச டி20 போட்டிகளில் விரைவில் 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கோலி 20 ரன்கள் எடுத்தார். 8வது ரன்னை எட்டியபோது விரைவில் 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கோலி நிகழ்த்தினார். 56 போட்டிகளில் 2000 ரன்களை எட்டியுள்ளார் கோலி. 

கோலிக்கு முன்னதாக  கப்டில், மெக்கல்லம் ஆகியோர் மட்டுமே 2000 ரன்களை கடந்துள்ளனர். ஆனால் அவர்களில் கப்டில் 68வது போட்டியிலும் மெக்கல்லம் 66வது போட்டியிலுமே 2000 ரன்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.