தோனியின் கேப்டன்சியின் கீழ் கிரிக்கெட் வாழ்வை தொடங்கி, இன்னும் தோனியுடன் இணைந்து ஆடிவருவதே தனக்கு கவுரவம் தான் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனிக்கு நேற்று 37வது பிறந்தநாள். இங்கிலாந்து தொடரில் ஆடிவரும் தோனி, அங்கு வீரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினர். சச்சின், சேவாக், ரெய்னா, கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் தோனிக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.

 

இந்திய அணி கேப்டன் கோலியும் வாழ்த்து தெரிவித்தார். தோனியின் கேப்டன்சியின் கீழ் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் கோலி. இந்திய அணிக்கு மூன்று சாம்பியன்ஷிப்பையும் வென்று கொடுத்த தோனி, கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். தோனிக்கு பிறகு கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 

தற்போது தோனி, கோலி கேப்டன்சியில் ஆடிவருகிறார். இந்நிலையில், தோனிக்கு கோலி கூறியுள்ள வாழ்த்தில், இந்த வயதிலும் நீங்கள்(தோனி) ஃபிட்டாகவும் வேகமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. உங்களது கேப்டன்சியின் கீழ் விளையாட தொடங்கி இன்னும் உங்களுடன் இணைந்து விளையாடுவது கவுரமாக இருக்கிறது என கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.