ஒருநாள் போட்டிகளில் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது தொடர்பாக சச்சின் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், இதுதொடர்பாக இந்திய அணி கேப்டன் கோலியும் கருத்து தெரிவித்துள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 300 ரன்களை கடந்தாலே பெரிய விஷயமாக இருந்த காலமெல்லாம் கடந்து, தற்போதெல்லாம் எளிதாக 400 ரன்களுக்கு மேல் எடுக்கப்படுகிறது. 

ஆனால் இப்போதெல்லாம் 300 ரன்கள் என்பது அசால்ட்டாகிவிட்டது. அதற்கு காரணம் ஒரு போட்டியில் 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவது தான். 2011க்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு போட்டியில் ஒரு பந்தை பயன்படுத்துவதன் மூலம், பவுலர்களுக்கு ஸ்விங் செய்வது எளிதாக இருக்கும். பந்து தேய்ந்துவிட்டால் ஸ்விங் செய்ய முடியும். ஆனால் 2 பந்துகள் பயன்படுத்த தொடங்கியது முதல் ரிவர்ஸ் ஸ்விங்கையே பார்க்க முடியவில்லை என்பது தான் வேதனை.  பந்து தேய்ந்தால்தான், வேகப்பந்துவீச்சாளர்களால் ”ரிவர்ஸ் ஸ்விங்” செய்ய முடியும். அதேபோல் ஸ்பின் பவுலர்களால் பந்தை நன்கு சுழலவிட முடியும்.

ஆனால் 2011க்கு பிறகு ஒருநாள் போட்டியின் இரண்டு பேட்டிங்குக்கும் தனித்தனியாக புதிய பந்துகள் பயன்படுத்த ஐசிசி அனுமதியளித்தது. இரண்டு இன்னிங்ஸ்களுக்கும் புதிய பந்து பயன்படுத்தப்படுவதால், வேகப்பந்து வீச்சாளர்களால் ரிவர்ஸ் ஸ்விங் செய்யமுடியவில்லை. அதேபோல ஸ்பின் பவுலர்களால் பந்தை நன்றாக சுழலவிட முடியவில்லை. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி ரன்களை குவித்து விடுகின்றனர். 

ஒருநாள் போட்டிகளில் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது, ஒருநாள் போட்டிகளின் பேரழிவிற்கு விருந்தாக அமையும் என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார். ரிவர்ஸ் ஸ்விங்கையே பார்க்க முடியவில்லை என்று வேதனையையும் வெளிப்படுத்தியிருந்தார். 

சச்சின் டெண்டுல்கரின் கருத்தை ஆமோதித்த பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ், சச்சின் கருத்துக்கு ஆதரவும் தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் கருத்து தெரிவித்துள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் கலந்துகொள்வதற்காக இந்திய வீரர்கள் இன்று புறப்பட்டு சென்றனர். முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, இரு புதிய பந்துகளை பயன்படுத்துவது என்பது பவுலர்களுக்கு கொடூரமானது. அவர்களின் நம்பிக்கையை சிதைக்கும் செயல். பந்துவீச்சாளர்களால் ஆக்ரோஷமாக பந்துவீசி எந்தவிதமான தாக்குதலையும் நடத்த முடியாது; பேட்ஸ்மேன்களை திணறவைக்க முடியாது. 

ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தால் மட்டும் பந்துவீச்சாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி பந்தை ஸ்விங் செய்ய முடியும். ஒரு பந்து பயன்படுத்தப்பட்டபோதும் நான் ஆடியுள்ளேன். அப்போது ரிவர்ஸ் ஸ்விங் என்பது வேகப்பந்து வீச்சில் முக்கிய அம்சமாக இருக்கும். முக்கியமான தருணங்களில் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக பந்தும் இருக்கும். பந்துகள் தேய்ந்த பிறகு பேட்ஸ்மேன்கள் ஆடுவது சவாலாக இருக்கும். ஆனால் இப்போது அப்படியான சவால்கள் இல்லை என கோலி தெரிவித்தார்.