இந்திய அணியில் அளவுக்கு அதிகமான திறமையான வீரர்கள் இருப்பது குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய இந்திய அணி மிகவும் வலுவான அணியாக திகழ்கிறது. சீனியர் வீரர்களுக்கு அப்பாற்பட்டு மிகவும் திறமையான இளம் வீரர்கள் பலர் வரிசை கட்டி காத்துக்கொண்டிருக்கின்றனர். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாத அளவிற்கு திறமை வாய்ந்தவர்களாக திகழ்கின்றனர். 

தற்போதைய இந்திய அணியில், ரோஹித், தவான், கோலி ஆகிய டாப் ஆர்டர்கள் மற்றும் தோனி, பாண்டியா ஆகிய மிடில் ஆர்டர்கள் தவிர எஞ்சிய 2 மிடில் ஆர்டர்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. அந்த இரண்டு இடத்திற்கு ரஹானே, ரெய்னா, கேதர் ஜாதவ், ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. 

அடுத்த தலைமுறை வீரர்களும் இப்போதே தயார் நிலையில் உள்ளனர். பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், ரிஷப் பண்ட், இஷான் கிஷான் ஆகியோர் மிகச்சிறந்த வீரர்களாக வலம்வருகின்றனர். 

இது இந்திய கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியமான விஷயம் தான். இந்தியா அயர்லாந்து தொடர் முடிந்ததும் இதுதொடர்பான கருத்தை கோலி தெரிவித்தார். 

இந்தியா அயர்லாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் ரோஹித் மற்றும் தவான் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அனைத்து வீரர்களுக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படும் என முதல் போட்டியின் முடிவில் கோலி கூறியபடி, இரண்டாவது போட்டியில் தவான் மற்றும் தோனிக்கு பதிலாக ராகுல் மற்றும் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டனர்.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ராகுல், அதிரடியாக ஆடி 70 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். முதல் போட்டியில் பெரிதாக அடிக்காத ரெய்னா, இரண்டாவது போட்டியில் 69 ரன்களை குவித்தார். இந்த தொடரில் அம்பாதி ராயுடுவும் ஆட இருந்தார். ஆனால் யோ யோ டெஸ்டில் அவர் தேர்ச்சி பெறாததால் அணியில் இடம்பெறவில்லை. இல்லையெனில் அணியில் அவரும் இருந்திருப்பார். 

இப்படியாக அனைத்து வீரர்களும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக ஆடுகின்றனர். இதனால் யாரை ஒதுக்குவது? யாருக்கு அணியில் ஆட வாய்ப்பு கொடுப்பது? என்பது பெரும் சிக்கலாக உள்ளது. 

இரண்டாவது போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் விராட் கோலி, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே இரண்டு போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டோம். அனைத்து வீரர்களும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதனால் அணியில் யாரை தேர்வு செய்வது என்பது பெரிய தலைவலியாக உள்ளது. எனினும் இது இந்திய அணிக்கு ஆரோக்கியமான விஷயம்தான். இளம் வீரர்கள் கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்கின்றனர் என தெரிவித்தார்.