இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். 

தீராத ரன் வேட்கையுடன் ரன்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படுகிறார். ஆக்ரோஷமான வீரர் மட்டுமல்லாமல் ஆக்ரோஷமான வெற்றிகரமான கேப்டனாகவும் கோலி திகழ்ந்து வருகிறார். களத்தில் தன்னை வம்பிழுத்து வீழ்த்த நினைப்பவர்களுக்கு பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுப்பதில் கோலி வல்லவர். 

இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் ஆடிவரும் கோலி, முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்தினார். 2014ல் சரியாக ஆடாத கோலி, இந்த முறை அந்த எதிர்மறை நினைவுகளை நீக்கி வெற்றியுடன் நாடு திரும்பும் முனைப்பில் உள்ளார்.

இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர பவுலர் கிளென் மெக்ராத்திடம், விராட் கோலியை சீண்டி, வம்பிழுத்தால் அவரை வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த மெக்ராத், இந்த விஷயத்தில் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாராவை போன்றவர். லாரா நல்ல ஃபார்மில் இருக்கும்போது அவரை தேவையில்லாமல் சீண்டினால், ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பாக ஆடி இரட்டை சதம் அடித்துவிடுவார். அந்த நாள் அவருக்கான நாளாக மாறிவிடும்.

விராட் கோலியும் லாராவை போலத்தான். நல்ல ஃபார்மில் இருக்கும்போது, அவரை சீண்டினால் பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்துவிடுவார். எதிரணி பவுலர்கள் அவரை சீண்டுவதையே சவாலாக எடுத்துக்கொண்டு மேலும் ஆக்ரோஷமாக ஆடி ரன்களை குவித்துவிடுவார் என மெக்ராத் தெரிவித்துள்ளார்.