எதிரணி வீரருக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆலோசனைகள் வழங்கிய சம்பவம் வைரலாகி, விராட் கோலியின் செயலுக்கு பாராட்டு குவிகிறது. 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிந்துவிட்டன. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. 

இதற்கிடையே இந்தியா மற்றும் எசெக்ஸ் கவுண்டி அணிகளுக்கு இடையே நடந்த பயிற்சி போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 395 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எசெக்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது. 

இந்நிலையில், இந்த போட்டிக்கு இடையே எசெக்ஸ் கவுண்டி அணியின் வீரர் வருண் சோப்ரா, இந்திய அணி கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேனுமான விராட் கோலியிடம் ஆலோசனைகள் பெற்றார். கோலியிடம் பேட்டிங் குறித்த சந்தேகங்களை கேட்டு ஆலோசனைகளை பெற்றார்.

இதுதொடர்பாக பேசியுள்ள வருண் சோப்ரா, விராட் கோலியிடம் தடுப்பாட்டம் உள்ளிட்ட பல பேட்டிங் உத்திகள் குறித்து கேட்டறிந்தேன். அவர் எனக்கு பல பேட்டிங் டிப்ஸ்களை வழங்கினார். இந்திய அணியின் முன்னணி வீரர்களுடன் ஆடியது சிறந்த அனுபவம் என கூறினார். கோலியின் ஆலோசனைகளின்படி பயிற்சியும் மேற்கொண்டுவருகிறார். 

இந்நிலையில், எதிரணி வீரர் என்றும் பாராமல் பேட்டிங் டிப்ஸ் வழங்கிய கோலிக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கோலியை பாராட்டிவருகின்றனர். தோனியும் இதுபோன்ற பல ஆலோசனைகளை எதிரணிகளுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.