இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸை ஒரு சாதனைக்காக விரட்டுகிறார். அதை எட்டிவிட்டால், 27 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை கோலி நிகழ்த்துவார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை இந்திய அணியும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் வென்றுள்ளன. மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பிறகு ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இங்கிலாந்து அதே முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றன. 

இந்த தொடரின் மூன்று போட்டிகளில், 75, 45, 71 ஆகிய ரன்களை குவித்து இந்திய அணிக்கு வழக்கம்போலவே தனது பக்கத்திலிருந்து சிறப்பான பங்காற்றினார் கோலி. இதன்மூலம் கூடுதலாக இரண்டு புள்ளிகளை பெற்றுள்ள கோலி, 911 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இதற்கு முன் 909 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது 911 புள்ளிகளை பெற்றுள்ளார். ஐசிசி ஒருநாள் தரவரிசையில் விராட் கோலி பெற்றுள்ள அதிகபட்ச புள்ளிகள் இதுதான். 

இந்த தொடரில் இரண்டு சதமடித்த இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், 818 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். முதலிடத்தில் உள்ள கோலிக்கும் இவருக்கும் 93 புள்ளிகள் வித்தியாசம். மாபெரும் புள்ளி வித்தியாசங்களுடன் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.

1991ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி வீரர் டீன் ஜோன்ஸ், 918 புள்ளிகளை பெற்றதே ஒருநாள் தரவரிசையில் ஒரு வீரர் பெற்ற அதிகபட்ச புள்ளிகளாகும். தற்போது கோலி 911 புள்ளிகளை பெற்றுள்ளார். இதன்பிறகு அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடினால், அந்த சாதனையை கோலி முறியடிக்கலாம். ஒருநாள் போட்டிகளில் கோலி சிறந்த வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடி, அந்த சாதனையை கோலி விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.