ஐபிஎல் போட்டிகளின்போது இந்திய வீரர்களுடன் ஏற்பட்ட நட்பை இப்போது மறந்துவிட்டதாகவும், இந்திய வீரர்கள் தற்போது போட்டியாளர்கள் மட்டும்தான் எனவும் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை இந்திய அணியும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் வென்றன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. 

இதற்கிடையே இந்த தொடர் குறித்து பேசிய இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், ஐபிஎல் போட்டிகளில் ஆடியபோது இந்திய வீரர்களுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. மும்பை அணியில் ஆடியபோது பாண்டியாவுடனும் ராஜஸ்தான் அணியில் ஆடியபோது ரஹானேவுடனும் நட்பு ஏற்பட்டது. அதேபோல, கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் மோயின் அலி ஆடினார். 

ஐபிஎல் நட்பு எல்லாம் நாடுகளுக்கு இடையேயான போட்டியில் கிடையாது. இப்போது அவர்கள் போட்டியாளர்களைத்தான் பார்க்கிறோம். ஐபிஎல் தொடரில் முன்னணி வீரர்களிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டேன். அவர்கள் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ஆடுகின்றனர். அதிலும் விராட் கோலி மிகத்திறமையான வீரர். இக்கட்டான பதற்றமான சூழலிலும் அணியை வெற்றியை நோக்கி கொண்டு செல்வார். அவரது பேட்டிங் திறமை எனக்கு ரொம்ப பிடிக்கும் என ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். 

ஃபார்ம் இல்லாமல் தவித்துவந்த பட்லர், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடியதன் விளைவாக மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.