ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்  கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது. முதல் போட்டியில் ஜொலிக்காத  ஜோ ரூட் 2-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆடி  சதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இந்த தொடரில் 216 ரன்கள் குவித்தார். இரண்டு போட்டியில் நாட்அவுட் என்பதால் சராசரி 216 ஆகும். இதன்மூலம் 818 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.இந்திய அணி கேப்டன் 75, 45 மற்றும் 71 ரன்கள் குவித்தார். சராசரி 63.66 ஆகும். இதன்மூலம் முதன்முறையாக ஒருநாள் தொடரில் 911 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நீடித்து வருகிறார். 3-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், 4-வது இடத்தில் ரோஹித் சர்மா மற்றும் ஓராண்டு தடை பெற்றுள்ள வார்னர் 5-வது இடத்திற்கும், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 6-வது இடத்திற்கும் பின்தங்கியுள்ளனர்.