தனது விக்கெட்டை கோலி கொண்டாடிய விதம் குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் இருவரும் சிறப்பாக ஆடிவருகின்றனர். 

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. 80 ரன்கள் எடுத்து களத்தில் நிலைத்து நின்ற ஜோ ரூட், கோலியால் ரன் அவுட் செய்யப்பட்டார். 63வது ஓவரின் 3வது பந்தை அடித்த பேர்ஸ்டோ, இரண்டு ரன்களுக்கு ரூட்டை அழைத்தார். ரூட்டும் ஓடினார். ஆனால், பந்தை பிடித்த கோலி நேரடியாக ஸ்டம்பை அடித்து, ரூட்டை ரன் அவுட்டாக்கினார். கோலி பந்தை பவுலிங் முனையில் இருந்த ஸ்டம்பை நோக்கி வீசினார். அந்த பந்தை பிடித்து ரன் அவுட் செய்வதற்காக பந்தை பிடிக்க முயன்ற அஷ்வின், பந்து நேரடியாக ஸ்டம்பை நோக்கி செல்வதை கண்டு விட்டுவிட்டார். அது நேரடியாக ஸ்டம்பில் அடித்து ரூட் அவுட்டானார். ஒருவேளை அஷ்வின் பந்தை பிடித்திருந்தால், ரூட் கிரீஸை அடைய டைமிங் கிடைத்திருக்கும். அஷ்வின் புத்திசாலித்தனமாக பந்தை விட்டதால் தான் ரூட் அவுட்டானார். 

இங்கிலாந்து கேப்டன் ரூட் அவுட்டானதும், முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் கோலி. மேலும் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்து இங்கிலாந்தை வெற்றி பெற செய்த ரூட், பேட்டை தூக்கி போட்டு மகிழ்ச்சியை கொண்டாடினார். நேற்று ரூட்டை ரன் அவுட்டாக்கியதும் அவர் பேட்டை தூக்கி போட்டதைப்போலவே செய்கை செய்து ரூட்டை வழியனுப்பி வைத்தார் கோலி. ஒருநாள் போட்டியில் ரூட் செய்த செய்கைக்கு பதிலடி கொடுத்து அனுப்பினார் கோலி. 

கோலியின் கொண்டாட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து கேப்டன் ரூட், நான் அவுட்டானதும் ஓய்வறையை நோக்கி சென்றதால், கோலியின் கொண்டாட்டத்தை பார்க்கவில்லை. பிறகு இரவு தான் அறிந்தேன். டெஸ்ட் தொடரின் தொடக்க நாளே விறுவிறுப்பாக அமைந்துள்ளது. இன்னும் 5 டெஸ்ட் போட்டிகள் முடிவதற்குள்ளாக என்னென்ன நடக்கின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என ரூட் தெரிவித்தார்.