காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் இருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. 

அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 போட்டிகளின்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. பந்தைத் தடுக்க முயன்றபோது அவரது இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. 

உடனே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு விரல் முறிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. இதனால் டி-20 அணியில் இருந்து பும்ரா நீக்கப்பட்டார். மேலும் ஒருநாள் தொடரில் அவர் இடம்பெறுவதும் சந்தேகமே. 

அவருக்கு பதிலாக இந்திய ஏ அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர், இந்திய டி-20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர். 

அதேபோல பயிற்சியின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு நாள் மற்றும் டி-20 அணிகளில் இருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் நீக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு மாற்று வீரர்களாக ஒருநாள் அணியில் அக்ஷர் படேல் மற்றும் டி-20 அணியில் க்ருணால் பாண்டியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கூட தற்போது இந்திய ஏ அணியில் இடம்பிடித்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரின்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர்.