ரோஹித் சர்மாவின் பேட்டிங் திறமையை இங்கிலாந்து அணியின் சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புகழ்ந்துள்ளார்.

சில நேரங்களில் வந்த வேகத்தில் அவுட்டானாலும், ஒரு இன்னிங்ஸ் முழுதும் ஆடும் திறன் கொண்டவர் ரோஹித் சர்மா. அதை பல தருணங்களில் நம்மால் பார்த்திருக்க முடியும். ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்கள், டி20 போட்டிகளில் மூன்று சதங்கள் என தனது அக்மார்க் இன்னிங்ஸ்களை கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார் ஹிட்மேன் என அழைக்கப்படும் ரோஹித். 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அதிரடியாக ஆடி சதமடித்த ரோஹித் சர்மா, 199 ரன்கள் என்ற கடின இலக்கை எளிதாக எட்ட உதவினார். 56 பந்துகளில் சதமடித்த ரோஹித் சர்மா, இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. தனக்கே உரிய பாணியில், சில வித்தியாசமான ஷாட்களை ஆடி, இங்கிலாந்து பவுலர்களை திணறடித்தார். 

ரோஹித்தின் அதிரடி சதத்தால், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியை வென்ற இந்திய அணி, டி20 தொடரையும் 2-1 என வென்றது. 

இந்நிலையில், ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து அணி மோசமாக பந்துவீசவில்லை. சிறப்பாகவே பந்துவீசினர். ஆனால் ரோஹித் சர்மா நல்ல பந்துகளையும் திறமையாக ஆடினார். அவர் ஒரு சிறந்த வீரர். மொத்த கிரெடிட்டும் ரோஹித்தின் பேட்டிங்கைத்தான் சேரும். எதிரணியின் எல்லா திட்டங்களையும் முறியடித்தார் ரோஹித். அவரது திறமைக்கு தலைவணங்க வேண்டும் என ஜேம்ஸ் ஆண்டர்சன் புகழ்ந்துள்ளார்.