இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிந்து, டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. 

டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்திய அணி வெற்றி பெற அதன் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி ரன்களை குவிப்பது அவசியம். இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனான விராட் கோலியை விரைவில் வீழ்த்திவிட்டால், இந்திய அணியை குறிப்பிட்ட ரன்களுக்குள் சுருட்டி வெற்றி பெறலாம் என்பது எதிரணிகளின் பொதுவான திட்டம். 

எனவே விராட் கோலி சிறப்பாக ஆடுவது முக்கியம். அதுமட்டுமல்லாமல் 2014ம் ஆண்டு இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஆடியபோது, 5 போட்டிகளிலும் சேர்த்தே விராட் கோலி 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். கோலியின் இதுவரையிலான கிரிக்கெட் வாழ்க்கையில், மிகவும் மோசமான தொடராக அது அமைந்தது.

2014ல் திணறி சொதப்பியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த தொடரில் கோலி கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். அதற்காகத்தான் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி போட்டிகளில் ஆட விருப்பப்பட்டார். ஆனால் காயம் காரணமாக கவுண்டி போட்டிகளில் ஆடமுடியாமல் போய்விட்டது. 

இப்படியாக, இந்திய அணிக்காகவும் தனக்காகவும் இந்த தொடரில் சிறப்பாக ஆடி ரன்களை குவிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் கோலி. ஆனால் தனிப்பட்ட ஃபார்மோ ரன்குவிப்போ முக்கியமல்ல என கோலி கூறியிருந்தார். 

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தன் சொந்த ரன்கள் முக்கியமல்ல என்று கோலி சொன்னால், அவர் பொய் சொல்கிறார் என அர்த்தம். இந்திய அணி இங்கிலாந்தில் வெற்றி பெற கோலி ரன்களை குவிப்பது அவசியம். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தில் அவரது கடந்தகால நினைவுகளை அகற்ற கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டும் என்றும் ரன்களை குவிக்க வேண்டும் என்றும்தான் நினைப்பார். 

தற்போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் தங்களது தவறுகளை வீடியோ பதிவில் பார்த்து திருத்திக்கொள்கின்றனர். அதேபோல் கோலியும் தனது கடந்த கால தவறுகளை பார்த்து அவற்றை களைவதற்கு கடுமையான பயிற்சிகளை எடுத்துவருவார் என்றுதான் கருதுகிறேன். அதனால் இங்கிலாந்து பவுலர்களுக்கும் கோலிக்கும் இடையேயான போராட்டம் சுவாரஸ்யமானதாக இருக்கும் என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.