இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, இளம் வீரர்களுக்கு வியூகங்களை கற்றுக்கொடுப்பதில் அளாதி பிரியம் கொண்டவர். 

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான தோனி, இந்திய அணியின் சீனியர் வீரர். சர்வதேச கிரிக்கெட்டின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர். விக்கெட் கீப்பிங்கில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். 

அதிவேக ஸ்டம்பிங், அதிவேக ரன் அவுட், அசாத்திய கேட்ச்கள் என விக்கெட் கீப்பிங்கில் மிரட்டுபவர். அவரது அனுபவத்தை இளம் விக்கெட் கீப்பர்களுக்கு கற்றுக்கொடுக்க தோனி தவறுவதே இல்லை. இந்திய அணியில் இருக்கும் இளம் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட், இஷான் கிஷான் ஆகியோருக்கு அவ்வப்போது பலனுள்ள பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். 

இந்திய வீரர்கள் மட்டுமின்றி எதிரணி வீரர்களுக்கும் பல டிப்ஸ்களை கொடுப்பார் தோனி. தோனி கொடுத்த டிப்ஸ்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், தனது திறமையை வளர்த்துக்கொள்ள பேருதவியாக இருப்பதாக ரிஷப் பண்ட் ஏற்கனவே தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷானுக்கு தோனி ஆலோசனைகள் வழங்கிய புகைப்படம் அந்த சமயத்தில் வைரலானது. இளம் வீரர் இஷான் கிஷான், 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் கேப்டனாக இருந்து 2016 ஜூனியர் உலக கோப்பையில் இறுதி போட்டிவரை இந்திய அணியை அழைத்து சென்றவர். 

கடந்த ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினார். அப்போது போட்டி முடிந்ததும் அவருக்கு தோனி பல விக்கெட் கீப்பிங் ஆலோசனைகளை வழங்கினார். இஷான் கிஷானும் தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தான். 

இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த இஷான் கிஷான், தோனி குறித்து பேசினார். தோனி தனக்கு ஆலோசனைகள் வழங்குவது குறித்து பேசிய இஷான் கிஷான், ஐபிஎல் தொடரில் ஆடியபோது போட்டிகளுக்கு இடையே தோனியுடன் பேசுவேன். அவரை சந்திக்கும்போதெல்லாம் பல ஆலோசனைகளை வழங்குவார். ஃபிட்னஸ் உட்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசுவார். நான் அவரை சந்திக்கும்போது பிசியாக இருந்தால், சிறிது நேரம் கழித்து அவரது அறையில் வந்து சந்திக்குமாறு கூறுவார். பின்னர் அறைக்கு சென்றால், எது குறித்து சந்தேகம் கேட்டாலும் விளக்கமளித்து உதவுவார். இப்படி, அவர் பிசியாக இருந்தாலும் கூட, அவர் ஃப்ரீயான பிறகு எனக்காக நேரம் ஒதுக்கி எனக்கு ஆலோசனைகளை வழங்குவார் என இஷான் கிஷான் நெகிழ்ச்சியுடன் கூறினார்.